பகவான் சத்யசாய்பாபா - பகுதி - (12)
வந்தவர் அந்தப்பகுதி ஆங்கிலேயேக் கலெக்டரின் டிரைவர் என்பது தெரியவந்தது. அவர் வீராப்பாக அங்கு நின்ற பெரியவர்களிடம் பாபாவைப் பற்றி விசாரித்தார். பின்பு பாபா விளையாடிக் கொண்டிருந்த இடத்திற்கே வந்துவிட்டார். மிகவும் அதிகாரத்துடன்,""உம்..புறப்படு. கலெக்டர் அங்கே காரில் அமர்ந்திருக்கிறார். கார் ரிப்பேராகி விட்டது. உன்னைத் தான் தெய்வம் என்கிறார்களே! அதை சரிசெய்து கிளம்பச்செய்,'' என்றார்.ஒரு சின்னப்பையனிடம் இந்த ஆள் இந்தளவுக்கு அதிகாரம் செய்கிறானே, என்று சுற்றி நின்ற பெரியவர்களுக்கு கோபம். இருந்தாலும், கலெக்டரின் டிரைவரைக் கண்டிக்க யாருக்கு தைரியம் வரும்! கலெக்டரின் கார் டிரைவரான இவன், நம்மைப் பற்றி ஏதாவது கலெக்டரிடம் வத்தி வைத்து விட்டால் தங்கள் கதி அதோகதி தான் என்று எண்ணி வாய் மூடி மவுனியாக அமைதி காத்தனர்.சத்யா டிரைவரின் தோற்றம் கண்டோ, மிரட்டலுக்குப் பயந்தோ பயம் கொள்ளவில்லை. ""நான் கார் மெக்கானிக் அல்ல. எனக்கு ரிப்பேர் பார்க்க தெரியாதே, நான் வந்து எப்படி காரைக் கிளப்ப முடியும்?'' என்றான். ""உனக்கு கார் ரிப்பேர் தெரியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால், மந்திரம் தெரியுமே! நீ அதை தொட்டாலே ஓடி விடுமாமே, எதையாவது செய்து காரைக் கிளப்பு. என்னோடு வா,'' என்றார் டிரைவர் அதட்டலாக. சத்யா கிளம்பி விட்டான். அவனது வீட்டாருக்கும், உறவினர், நண்பர்களுக்கும் பயம். இருப்பினும் அரசாங்க காரியம் என்பதால், அவனைத் தடுக்கவும் வழியில்லாமல் நின்றனர். சத்யா கார் நின்ற மலைப்பாங்கான பகுதிக்கு வந்து விட்டான். துரை கடும் டென்ஷனில் இருந்தார். ""உடனே, காரைக் கிளப்ப வழிபாரு. சீக்கிரம் கிளம்பணும். எனக்கு நெறைய வேலைகள் இருக்கு '' என்றார் எரிச்சலாக. சத்யா காருக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே புலி ஒன்று படுத்திருந்தது. அது துரையால் வேட்டையாடப்பட்டு இறந்த புலி.""மிஸ்டர் துரை!'' என்று விளித்தான் சத்யா. துரைக்கு தூக்கி வாரிப் போட்டது. ""ஒரு கிராமத்து சிறுவன் கலெக்டரான தன்னை இவ்வளவு அதிகாரமாக அழைக்கிறானே,'' அவர் அதிர்சசியுடன் அவனைப் பார்த்தார். ""உ<ங்கள் வண்டியில் இறந்து கிடக்கும் புலியைச் சுட்டுக் கொன்று விட்டீர்கள். அதன் குட்டிகள் தாயைப் பிரிந்து காட்டில் அல்லாடுகின்றன. தாயையும், குட்டியையும் பிரிப்பது எங்கள் நாட்டில் பெரும் பாவச் செயலாகக் கருதப்படும். நீங்கள் உடனே காட்டிற்குப் போய், குட்டிகளைக் கண்டுபிடித்து அவற்றின் துன்பம் தீரும் வகையில் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யுங்கள். அதுவரை யார் வந்து ரிப்பேர் செய்தாலும் இந்தக் கார் நகராது,'' என்றான் சத்யா. அதிகாரி மிரண்டு விட்டார். ""காட்டில் மூன்று குட்டிகளின் தாய்ப்புலியை நான் சுட்டுக் கொன்றது இவனுக்கு எப்படி தெரிந்தது? போதாக்குறைக்கு இவன் மந்திர தந்திரம் தெரிந்தவன் என டிரைவர் சொல்லி இருக்கிறார். எப்படியிருப்பினும் இவன் ஒரு ஆபத்தான சிறுவன். இவனிடம் கவனமாக நடந்து கொள்வதே நல்லது,'' என சிந்தித்த கலெக்டர், மறுப்பேதும் சொல்லாமல் மீண்டும் காட்டுக்குள் சென்றார்.நீண்ட தேடுதலுக்கு பிறகு, பயந்து கிடந்த புலிக்குட்டிகளைக் கண்டுபிடித்தார். அவற்றை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைப்பதாக உறுதி கூறினார். அவ்வளவு தான். காரை டிரைவர் ஸ்டார்ட் செய்ததும், வண்டி புறப்பட்டது. இப்பேர்ப்பட்ட மகானா இந்தச் சிறுவன் என்று ஆச்சர்யப்பட்டார் கலெக்டர். இந்த சம்பவம் நடந்த சிறிது நாளில் சத்யாவின் எட்டாம் வகுப்பு படிப்பு புங்கப்பட்டணம் பள்ளியில் நிறைவடைந்தது. அவன் விடுமுறையில் இருந்தான். மேற்கொண்டு படிக்க வைக்க கிராமத்தில் வசதி இல்லை. எனவே, சத்யா கவிதைகளை எழுதுவதில் பொழுது போக்கி வந்தான். ஊரெங்கும் தினமும் பகல் வேளையில் பஜனை சத்தம் கேட்டது. ஈஸ்வராம்பாவுக்கு மகனை வெளியூருக்கு அனுப்பி மேல்படிப்பு படிக்க வைக்க விரும்பவில்லை. சத்யாவைப் பிரியும் மனோபாவம் அவளிடம் இல்லை. இந்த நேரத்தில் சத்யாவின் அண்ணன் சேஷமராஜூ தாயாரிடம் ஒரு யோசனை சொன்னார். ஊரெங்கும் தினமும் பகல் வேளையில் பஜனை சத்தம் கேட்டது. ஈஸ்வராம்பாவுக்கு மகனை வெளியூருக்கு அனுப்பி மேல்படிப்பு படிக்க வைக்க விரும்பவில்லை. மகனைப் பிரியும் மனோபாவம் அவரிடம் இல்லை. இந்த நேரத்தில் பாபாவின் அண்ணன் சேஷமராஜூ தாயாரிடம் ஒரு யோசனை சொன்னார். ""அம்மா! சத்யா இங்கு இருந்தால் பஜனை, கச்சேரி, நாடகம், கவிதை என்று பொழுதை போக்கி விடுவான். அதனால் அவனை கமலாப்பூருக்கு அனுப்பி விடுவோம். (கமலாப்பூர் ஆந்திராவின் கடப்பை மாவட்டத்தில் உள்ளது)அங்கே இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் அவன் மேல்படிப்பு படிக்கட்டும்'' என்றார். ஈஸ்வரம்மா மறுத்து விட்டார். ""என் மகனைப் பிரியும் சக்தி எனக்கில்லை. வெளியூரில் தங்கிப் படிக்கும் அளவுக்கு அவனுக்கு வயதும் இல்லை. நான் அனுப்ப மாட்டேன்''. என்றதும், கணவர் வெங்கப்பராஜூவின் காதில் இது விழுந்தது. ""ஈஸ்வரா! உன் மகன் மீது உனக்கிருக்கும் பாசத்தை விட ஒருமடங்கு அதிகமாகவே எனக்கும் இருக்கிறது. இங்கிருந்தால் அவன் நாடகம், பஜனை என வாழ்க்கையை ஓட்டி விட வேண்டியது தான். உயர்கல்வி படித்தால் தான் அவனுக்கு சர்க்கார் உத்தியோகம் கிடைக்கும். நல்ல கவுரவமான வாழ்க்கையை சத்யா அமைத்துக் கொள்வான். என் நாடகத் தொழில் என் மகனுக்கு வேண்டாம்,''என்றார். கணவரின் சொல்லில் நியாயம் இருப்பதை ஈஸ்வரம்மா புரிந்து கொண்டார். கமலாப்பூரில் வசித்த சேஷமராஜூவின் மாமனார் வீட்டில், பாபாவைத் தங்கவைத்து படிக்கச் சொல்ல முடிவாயிற்று. பாபா புட்டபர்த்தியை விட்டு புறப்பட்டு விட்டார். ஊரே கண்ணீர் விட்டது. கிருஷ்ணர் கோகுலத்தை விட்டு மதுராபுரிக்கு கிளம்பிய போது, ""கண்ணா! நீ மீண்டும் வருவாயா?'' என கோபியர்கள் வடித்த கண்ணீர் போல மக்களும் அந்த தெய்வப்பிறவியை விட்டுப் பிரிந்த போது அழுதனர். அவரை அன்போடு வளர்த்த பக்கத்து வீட்டு சுப்பம்மா வடித்த கண்ணீருக்கு அளவே இல்லை. அது சித்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கையே ஏற்படுத்தி விடும் போல் இருந்தது. தெய்வப்பிறவியான பாபாவுக்கு கூட சற்று கலக்கம் தான். கிராமத்தில் உள்ள தன் அன்பு நண்பர்கள், நாடகக்கலைஞர்கள், வேளாவேளைக்கு அமுதூட்டிய அன்னை, தன்னை கண்ணின் மணி போல காத்த பக்கத்து வீட்டு அன்னை சுப்பம்மா, நாடகத்தில் புகழ்பெறக் காரணமான தந்தை, பள்ளி செல்லும் நேரத்தில் அலங்கரித்து அனுப்பிய சகோதரிகள்....அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார். ஆனாலும், பிரிவுத்துயரை வெளிக்காட்டாமல் தன் அண்ணனுடன் கமலாப்பூருக்கு கிளம்பி விட்டார். எல்லாரும் அழுதனர். நண்பர்கள் அழுத அழுகை அனைவரையும் கலக்கியது. புட்டபர்த்தியே களை இழந்தது போன்ற பிரமை. ஊரை விட்டு தெய்வமே வெளியேறுவது போன்ற உணர்வு....பாபா கிளம்பி விட்டார். -தொடரும்