பகவான் சத்ய சாய்பாபா ( பகுதி 10)
பாபா தன் நண்பர்களிடம் இதற்கு பதில் சொன்னார்.''இது ஒன்றும் அதிசயமில்லை. நம் கிராம தேவதை ஒன்று இந்தப் பண்டங்களை எனக்கு தந்து கொண்டிருக்கிறது. அதை நான் உங்களுக்கு தந்து கொண்டிருக்கிறேன்,''என்று. இதையடுத்து, குழந்தைகள் அவரை தெய்வமாகவே மதிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், பாபாவின் இந்த நிலை அவருக்கு சாதகத்தை விட, பாதகத்தையே அதிகம் தந்தது. ஒருநாள் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பாபாவை, தாய் ஈஸ்வரம்மா கடுமையான வார்த்தைகளால் திட்டினார். ''டேய் சத்யா! நீ இப்படியெல்லாம் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தா மாடு மேய்க்கத்தாண்டா போவே!''அம்மா இவ்வளவு கடுமையான வார்த்தைகளை உதிர்த்ததை பாபா கேட்டதே இல்லை. அவர் அம்மாவின் முகத்தை வருத்தத்துடன் ஏறிட்டுப் பார்த்தார். ''அம்மா! எதற்காகத் திட்டுறீங்க! நான்எந்தத் தப்பும் செய்யலலையே!''''டேய்! பொய் சொல்றியா! இன்றைக்கு வகுப்பிலே கொண்டப்பா ஆசிரியரை என்னடா பண்ணினே?'' என அம்மா கேட்டதும், தான் பாபாவுக்கு ''ஓகோ! விஷயம் இதுவா?'' என்று ஒரு தெளிவுக்கே வர முடிந்தது.அப்படி என்ன தான் வகுப்பில் நடந்தது?அன்று வகுப்புகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அந்தப் பள்ளியில் இரண்டே ஆசிரியர்கள் தான். ஒருவர் கொண்டப்பா. இன்னொருவர் மகபூப்கான். பாபா மீது மகபூப்கானுக்கு மிகுந்த பிரியம் உண்டு. அவருக்கு தான் கொண்டு வரும் இனிப்பு பண்டங்களைக் கொடுப்பார். ஆனால், பாபா அதைச் சாப்பிட யோசிப்பார். மகபூப்கான் வீட்டில் சகஜமாக மாமிசம் சமைப்பார்கள். 'மாமிசம் சமைத்த அதே பாத்திரத்தில் தானே இந்த பண்டங்களையும் சமைத்திருப்பார்கள்' என்பதே தயக்கத்திற்குக் காரணம்.மகபூப்கான் இதைப் புரிந்து கொண்டார். ஒருநாள் தன் வீட்டை நன்றாகக் கழுவி, மெழுகி வீட்டைச் சுத்தமாக்கினார். புதுப்பாத்திரங்கள், புது எண்ணெய், புதிதாக மளிகைப் பொருட்கள் வாங்கி வீட்டில் பலகாரம் செய்யச் சொன்னார். அதை பாபாவுக்கு கொண்டு வந்தார். ''சத்யா! இன்று என் வீட்டைச் சுத்தமாக்கி, புதுப்பாத்திரத்தில் பலகாரம் செய்து கொண்டு வந்துள்ளேன். இதையாவது சாப்பிடு,'' என்றார். ஆசிரியர் தன் மீது கொண்ட அன்பை எண்ணி வியந்த பாபா, அவற்றை சாப்பிட்டார். பாபா 'சமயங்களைக் கடந்து அருள் செய்பவர்' என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியது. ஆசிரியர் கொண்டப்பா கண்டிப்பானவர். வகுப்பில் பாடம் சொல்லித்தரும் போது, மாணவர்கள் வேறு எங்காவது கவனம் செலுத்தினால் அவருக்குப் பிடிக்காது. அன்று , அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, பாபா ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். கொண்டப்பா அதைக் கவனித்து விட்டார். ''சத்யா! நான் பாடம் நடத்தும்போது கவனிக்காமல் அங்கே என்ன செஞ்சுகிட்டிருக்கே!'' என்று சத்தம் போட்டார்.''ஐயா! நான் இங்கே எழுதிக்கிட்டிருந்தாலும், நீங்க சொல்றதையும் கவனிச்சுகிட்டு தான் இருக்கேன்! இதோ பாருங்க!'' என்று தான் எழுதிக் கொண்டிருந்த நோட்டை ஆசிரியரிடம் கொண்டு வந்து காட்டினார். நோட்டில் பஜனைப் பாட்டு ஒன்று எழுதப்பட்டிருந்தது.பாபாவின் இந்த செய்கை அவரை எதிர்த்துப் பேசுவது போலவும், எதிரான நடவடிக்கை மேற்கொள்வது போலவும் கொண்டப்பாவுக்குத் தோன்றியது.''சத்யா! செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டிருக்கணும்! அல்லது நோட்டை மூடி வச்சுட்டு பாடத்தை மட்டும் கவனிச்சிருக்கணும், இரண்டும் செய்யாமல், பாடத்துக்கு சம்பந்தமில்லாத ஏதோ பாட்டை எழுதி வந்து இங்கே காட்டுறே! பெஞ்சு மேலே ஏறு. பள்ளி முடியற வரைக்கும் நிற்கணும், புரியுதா?'' என்று தண்டனை கொடுத்து விட்டார்.கண்ணனை உரலில் கட்டிப்போட்டாளே யசோதை! அந்த நிலை இப்போது பாபாவுக்கு!பாபாவிடம் ஒரு வழக்கம் உண்டு. அவர் தன் நண்பர்களுக்கு வகுப்பு நேரத்தில் அவரவர் நோட்டை வாங்கி பஜனைப் பாடல் எழுதிக் கொடுப்பார். அதே நேரம் பாடங்களிலும் கவனம் செலுத்த தவறியதில்லை. படிப்பிலும் படுசுட்டி தான்! ஆனாலும், ஆசிரியர்கள் இப்படிப்பட்ட செயல்களை ஒப்புக்கொள்ள மாட்டார்களே!அடுத்த வகுப்புக்கான நேரம் வந்தது. கொண்டப்பா நாற்காலியை விட்டு எழ முயல மகபூப்கான் உள்ளே வந்தார். பெஞ்சில் நிற்கும் பாபாவைக் கவனித்த அவர், ''ஆஹா! சத்யா தெய்வ அவதாரமாயிற்றே! அவனைத் தண்டிக்கலாமா!'' என்று சிந்தித்தவர், கொண்டப்பாவிடம், ''சார்! நீங்கள் சத்யாவுக்கு கொடுத்த தண்டனை போதும். மேலும், என் வகுப்பும் வந்துவிட்டது. அவனை உட்காரச் சொல்லுங்கள்,'' என்றார்.கொண்டப்பா மறுத்துவிட்டார். ''அவன் இன்று முழுவதும் நிற்கட்டும். அப்போது தான் வகுப்பில் ஒழுங்கா இருப்பான்,' 'என்று கறாராக சொல்லிவிட்டு எழுந்தார். அவரால் எழ முடியவில்லை. அவருக்கு காரணம் புரியவில்லை. நாற்காலி அவருடன் ஒட்டிக்கொண்டது. மாணவர்கள் சிரித்தனர். சில மாணவர்கள் எழுந்து, ''ஐயா! எங்கள் குருவை பெஞ்சில் அமரச்சொல்லுங்கள். இல்லாவிட்டால், உங்களால் எழ இயலாது. அவர் தெய்வப்பிறவி,'' என்றனர்.மகபூப்கானும் இதையே கொண்டப்பாவிடம் சொன்னார். வேறு வழியில்லாததால், பாபாவை அமரச்சொன்னார் கொண்டப்பா. பாபா, அமர்ந்தாரோ இல்லையோ ஒட்டிய நாற்காலி விட்டு விட்டது. பாபா, நிஜமாகவே தெய்வப்பிறவியே என்பதை கொண்டப்பாவும் உணர்ந்து கொண்டார். அவர் பாபா மீது கருணைப்பார்வை பொழிந்து விட்டு சென்றார்.இப்படியொரு சம்பவம் பள்ளியில் நடந்தால் வீட்டுக்குத் தெரியாமல் இருக்குமா? பாபாவுடன் படிக்கும் சக மாணவர்கள் சிலர், சற்று முன்னதாகவே ஊருக்கு வந்து வகுப்பில் நடந்த இந்த விஷயத்தை ஈஸ்வரம்மாவிடம் சொல்லிவிட்டனர். அம்மா கோபமாகி விட்டார். பாபா வீட்டுக்கு வந்ததுமே விசாரணை ஆரம்பமாகி விட்டது.பாபா அதற்கு பதிலேதும் சொல்லவில்லை. ஈஸ்வரம்மா அவரைக் கண்டித்து விட்டு வெளியே வந்தார். எதிரே ஆசிரியர் கொண்டப்பா வந்தார். -தொடரும்