பகவான் சத்ய சாய்பாபா
பாபாவுக்கும் சுப்பம்மா வீட்டிற்குச் செல்வதென்றால் அலாதி இன்பம். மற்றவர்களை விட சுப்பம்மாவிடம் மிக அதிகமாகவே ஒட்டிக்கொள்வார். சுப்பம்மாவுக்கும் குழந்தைகள் இல்லாததால் செக்கச்சிவந்த பாபா மீது அலாதிப் பிரியம். ஈஸ்வரம்மா இதற்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்டார்.''அங்கு போனால் சத்யா சந்தோஷமாக இருக்கிறானே! வீட்டுக்கு வந்ததும் <உம்மென ஆகி விடுகிறான். சுப்பம்மா வீட்டில், இங்கில்லாத ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது?'' என அவர் கருதினார்.சுப்பம்மாவின் குடும்பம் பிராமணக் குடும்பம். பாபாவின் குடும்பத்தில் ஒரு சிலருக்கு அசைவ பழக்கம் உண்டு. பாபாவோ, தன் தாத்தா கொண்டமராஜுவைப் போல சைவப்பிரியராக இருக்கவே விரும்பினார். சுப்பம்மாவின் குடும்பம் சைவம் என்பதால் பெற்ற தாயைப் போல அவரைப் பார்க்க ஆரம்பித்தார் பாபா. அந்த சைவ வழக்கமே பாபாவை சுப்பம்மாவிடம் ஈர்த்துச் சென்றது என்பதைப் புரிந்து கொண்டார் ஈஸ்வரம்மா. இன்னும் சொல்லப்போனால் கொண்டமராஜுவின் குடும்பத்தார் ஈஸ்வரம்மாவை தேவகி என்றும், சுப்பம்மாவை யசோதை என்றும் குறிப்பிடுவர். ஆம்..கண்ணபிரான் பிறந்தது தேவகிக்கு. வளரச்சென்றது ஆயர் பாடியிலுள்ள யசோதை வீட்டுக்குத்தானே! சிலருக்கு குழந்தை பெற்றாலும் அதன் சேஷ்டைகளைக் காணும் பாக்கியம் கிடைப்பதில்லை. தேவகி கண்ணனைப் பெற்றாளே தவிர, அவனது குழந்தைப் பருவ சேஷ்டைகளைக் காணும் பாக்கியம் கிடைக்கவில்லையே, அது யசோதைக்கல்லவா கிடைத்தது! அதுபோல், வெகுநேரம் சுப்பம்மா வீட்டில் பொழுதைக் கழித்து விடுவார் பாபா.குழந்தை பாபா இளமையிலேயே நற்குணமும், வள்ளல் தன்மையும் மிக்கவராக விளங்கினார். அவர், தனக்கு இன்ன வகை <உணவு தான் வேண்டும், இன்ன வகை உடை தான் வேண்டும் என்று கேட்டதே கிடையாது. அவரது வீட்டுக்கு அருகிலுள்ள அனந்தப்பூர் அல்லது இந்துப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து தான் புத்தாடை வாங்கி வருவார்கள். வீட்டிலுள்ள குழந்தைகளெல்லாம் ஓடி வந்து, தங்களுக்கு பிடித்தமானவற்றை எடுத்துக் கொள்வார்கள். அதில் எது மிஞ்சியதோ, அதை பாபா உடுத்திக் கொள்வார். இதுதான் தனக்கு வேண்டும் என்று அவர் எந்தக்காலத்திலும் பிடிவாதம் செய்ததில்லை. ''உனது மகிழ்ச்சியே எனது உணவு'' என்று இப்போதும் பாபா குறிப்பிடுகிறார். அவரது செய்கைகள் எல்லாமே வித்தியாசம் தான். சக நண்பர்களுடன் ஆற்றுக்குப் போவார். விளையாட்டும் ஆட்ட பாட்டமுமாக இருப்பார். ஆனால், வீட்டுக்கு வந்ததும் மவுனமாகி விடுவார். ஈஸ்வரம்மா அவருக்கு பல பண்டங்கள் செய்து கொடுப்பார். 'வேண்டாம்' என சொல்லி விடுவார் பாபா. தாயின் மனம் படாதபாடு படும்.ஒருமுறை ராமலீலா திருவிழா. அன்று வீட்டில் பாபா இல்லை. நீண்டநேரமாக திரும்பி வரவும் இல்லை. வீட்டிலுள்ளவர்கள் அவரைத் தேடியலைந்தனர். அப்போது சிலர் ஒரு சப்பரத்தில் ராமனின் படத்தை அலங்கரித்து எடுத்து வந்தனர். பாபா அந்தப் படத்தின் கீழே அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த ஈஸ்வரம்மா, ''இவனை சப்பரத்தில் ஏற பூஜாரி எப்படி அனுமதித்தார்?'' என ஆச்சரியப்பட்டார்.அது மட்டுமல்ல! பிராணிகளின் மீதும் அவருக்கு பிரியம் அதிகம். எந்தப் பிராணி யாவது துன்புறுத்தப்பட்டால் அவர் மிகவும் வருந்துவார். ஒரு சமயம், ஊரிலுள்ள சில பிள்ளைகள் சில தவளைகளைப் பிடித்து ஒரு பையில் போட்டிருந்தார்கள். அவற்றை துன்புறுத்தி விளையாட வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள். பாபா அவர்களை அழைத்து, ''தவளைகளை விட்டு விடுங்கள். அவற்றைத் துன்புறுத்தாதீர்கள்,'' என்றார். சிறுவர்கள் கேட்பதாக இல்லை. சற்றுநேரத்தில் ஒரு தெய்வீக அதிசயத்தைச் செய்தார்.''உங்கள் பையைத் திறந்து பாருங்கள். அதில் தவளைகள் இல்லையே,'' என்றார். பையன்களும் அவசர அவசரமாகப் பார்க்க உள்ளிருந்து புறாக்கள் வெளியே பறந்தன. ஆம்...தவளைகளைப் புறாக்களாக மாற்றி தப்பிக்கச் செய்து விட்டார். தவளைகளாக அஞ்ஞானத்துடன் இருக்கும் பக்தர்கள், ஆன்மிகத்தின் <உச்சநிலைக்கே பறக்கலாம் என்ற உயர்ந்த கருத்தையும் இதன் மூலம் இளமையிலேயே உலகத்துக்கு அறிவித்து விட்டார் பகவான். அவரது இரக்க சுபாவத்தைப் பயன்படுத்தி ஊரில் இருக்கும் பிச்சைக்காரர்கள் எல்லாம் வீட்டிற்கே வர ஆரம்பித்தார்கள். சில சமயங்களில் அவரே அவர்களைத் தேடி அழைத்து வந்து விடுவார். ஒருநாள் அவரது சாப்பாட்டை பிச்சைக்காரனுக்கு கொடுத்து விட்டார். ஈஸ்வரம்மா அதைப் பார்த்து விட்டார். ''நீ சாப்பிட்டாயா?'' ''ஆமாம் அம்மா!''''பொய் சொல்லாதே. நீ பிச்சைக்காரனுக்கு கொடுத்ததை நான் பார்த்து விட்டேன்,''.''அம்மா! நானும் சாப்பிட்டு விட்டேன். தாத்தா எனக்கு ஏற்கனவே சாப்பாடு தந்து விட்டாரே!''அம்மாவுக்கு சந்தேகம். கொண்டமராஜுவிடம் போய் கேட்டார்.''இல்லையே! நான் ஏதும் அவனுக்கு சாப்பாடு கொடுக்கவில்லையே!'' என்று குட்டை <உடைத்து விட்டார்.அம்மாவின் கோபம் அதிகமாகி விட்டது. பாபாவோ திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.''சத்யா! திரும்பத் திரும்ப பொய் சொல்லாதே,'' என்று கோபமாகக் கேட்டதும், ''இதோ! பாருங்கள், என் கையில் நெய் வாசம் அடிப்பதை!'' என்று அம்மாவின் முகத்தில் கை வைத்தார். அம்மாவுக்கு ஆச்சரியமாகி விட்டது. இவனுக்கு நெய்ச்சோறு கொடுத்தது யார்? வயிறு நிறைய சாப்பிட்டது போன்ற <உணர்வுடன் இருக்கிறானே!'' என்று ஆச்சரியப்பட்டார். இது எப்படி சாத்தியம்?'' அவர் சிந்திக்க ஆரம் பித்தார்.-தொடரும்