உள்ளூர் செய்திகள்

குமாரநல்லூரில் மதுரை மீனாட்சி

மதுரை மீனாட்சி அம்மன், கேரளா, குமாரநல்லூரில் பகவதி என்னும் திருநாமம் தாங்கி கோயில்  கொண்டிருக்கிறாள். அவளைத் தரிசிக்கச் செல்வோமா! தல வரலாறு: சகல சக்தியும் நிறைந்த பகவதியை பிரதிஷ்டை செய்ய விரும்பி பரசுராமர் ஒரு சிலை வடித்தார். இதை ஜலவாசத்தில் வைத்து வேதகிரி மலையில் தவம் இருந்தார். கேரளாவை ஆண்ட சேரமான் மன்னன், குமாரநல்லூரில் முருகனுக்கும், வைக்கத்தில் பகவதிக்கும் கோயில் அமைக்க முடிவு செய்தான். அந்த நேரத்தில் மதுரை மீனாட்சி கோயிலில் அம்மனின் விலை மதிப்புள்ள மூக்குத்தியைக் காணவில்லை. 'அதை 41 நாட்களுக்குள் கண்டுபிடிக்காவிட்டால் சிரச்சேதம் செய்யப்படுவீர்' என பூஜாரி சாந்தி துவிஜனுக்கு மன்னன் உத்தரவிட்டான்.  41 நாள் ஆனபின்னும் கிடைக்காததால், மீனாட்சியின் காலில் விழுந்து தியானத்தில் மூழ்கினார். அப்போது அசரீரி தோன்றி, 'உடனடியாக கிளம்பு' என்றது. கண்விழித்த பூஜாரியின் முன்னால் ஒரு ஒளி செல்ல, மீனாட்சியின் திருநாமத்தை உச்சரித்தபடி தொடர்ந்து சென்றார். அந்த ஒளி குமாரநல்லூரில் முருகனுக்காக கட்டப்பட்டிருந்த கோயில்  கர்ப்பகிரகத்தில் ஐக்கியமானது. பழி நீங்கிய பூஜாரி அந்த ஊரில் தங்கி விட்டார். அந்த நேரத்தில் முருகன் சிலை பிரதிஷ்டைக்குரிய பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.  பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சேரமானின் காதுகளில்,''குமரன் அல்ல ஊரில்'' (ஊரில் குமரன் இல்லை) என்று அசரீரி ஒலித்தது. வருத்தமடைந்த மன்னன், முதலில் வைக்கத்தில் பகவதி சிலை பிரதிஷ்டையை முடித்து விட்டு அதன் பின் இங்கு முருகனை பிரதிஷ்டை செய்யலாம் என நினைத்து வைக்கம் சென்றான். வைக்கத்திலும் பகவதிக்கு சிலை வைக்க முடியாமல் தடங்கல் ஏற்பட்டது. முடிவாக குமாரநல்லூரில் பிரதிஷ்டை செய்ய இருந்த முருகனை வைக்கத்திலும், வைக்கத்தில் அமைக்க இருந்த பகவதியை குமாரநல்லூரிலும் பிரதிஷ்டை செய்ய முடிவெடுக்கப்பட்டது.  பரசுராமரால் வேதகிரி மலையில் ஜலவாசம் செய்யப்பட்ட பகவதி சிலை கண்டுபிடிக்கப்பட்டு குமாரநல்லூர் கொண்டு வரப்பட்டது. பிரதிஷ்டை செய்யும் நேரத்தில், ஒரு சன்னியாசி கர்ப்பக்கிரகத்தில் நுழைந்தார். பகவதி சிலையை பிரதிஷ்டை செய்து விட்டு மாயமானார். இவர் 'பரசுராமர்' என தல புராணம் கூறுகிறது. மதுரையிலிருந்து வந்த சாந்தி துவிஜன் கோயில் பூஜாரியானார். இவரது வாரிசுகளே தற்போது பூஜை செய்து வருகின்றனர். இவர்கள் தங்கியுள்ள வீடு 'மதுர மனா' எனப்படுகிறது. தல சிறப்பு: 'குமரன் இல்லாத ஊர்' என்ற பெயரே, 'குமாரநல்லூர்' என மருவியது. 2400 ஆண்டுகள் பழமையானதும், 108 துர்க்கை தலங்களில் ஒன்றும் ஆகும். இந்தக் கோயில் அருகில் அற்புத நாராயணன் கோயில், மகாதேவர் கோயில், மள்ளியூர் மகா கணபதி கோயில், கடுத்துருத்தி சிவன் கோயில், சுப்ரமணியர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. திருவிழா: கார்த்திகையில் 10 நாள் விழா நடக்கிறது. ஒன்பதாம் நாளான கார்த்திகையன்று ஆறாட்டு பூஜை நடக்கிறது. அன்று 36 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும். பகவதி எழுந்தருளும் நிகழ்ச்சியில் பெண் யானைகள் பயன் படுத்தப்படும்.  இது தவிர நவராத்திரி, பங்குனி பூரம், கொடிமர பிரதிஷ்டை தினம் ஆகியவை முக்கிய விழாக்களாகும். மலையாள மாத முதல் தேதி, செவ்வாய், வெள்ளி, கார்த்திகை நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜை உண்டு. பிரார்த்தனை: திருமணத்தடைஉள்ளவர்கள் 'சுயம்வர புஷ்பாஞ்சலி' பூஜை நடத்தினால் திருமணம் நடக்கும். அம்மன் இங்கு கன்னியாக அருள்பாலிப்பதால் 'மஞ்சள் நீராட்டு' முக்கிய வழிபாடு. குலம் சிறப்பாக வாழவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி சிறக்கவும், நோய்கள் தீரவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது. குடும்ப ஒற்றுமைக்காக கோயில் நடையில் விளக்கேற்றுகின்றனர். இருப்பிடம்: கோட்டயத்திலிருந்து 6 கி.மீ. தூரம். பஸ் வசதி உண்டு.திறக்கும் நேரம்: காலை 4- 11.30 மணி, மாலை 5- இரவு 7.45 மணி.போன்: 0481-231 2737.