வந்தாள் மகாலட்சுமியே! என்றும் அவள் ஆட்சியே!
UPDATED : ஜூலை 20, 2012 | ADDED : ஜூலை 20, 2012
ஜூலை 27 வரலட்சுமி விரதம்முதன்முறையாக துவங்கப் போகிறீர்களா?பெண்கள் கடைபிடிக்கும் விரதங்களில் வரலட்சுமி விரதம் முக்கியமானது. ஆந்திராவில் இந்த விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நோன்பை மாமியார், மருமகளுக்கு எடுத்து வைப்பது மரபு. புதிதாக திருமணமான பெண்கள், அந்த ஆண்டிலேயே விரதத்தை துவங்கி விடுவது சிறப்பு. ஒருவேளை, இவ்வளவு நாள் விட்டுப் போயிருந்தாலும் இப்போது துவங்கலாம். இதனை 'தலைநோன்பு' என்பர். தலைநோன்பு துவங்குவோர் லட்சுமி தாயாருக்கு லட்டு, மைசூர்பாகு, திரட்டுப்பால் நைவேத்யம் செய்யலாம். இதுதவிர, வழக்கமான பாயாசம், வடை, கொழுக்கட்டை, எள்ளுருண்டை, இட்லி தயாரித்து ஏழைப்பெண்களுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும். நல்ல உடையும் கொடுக்கலாம்.தோரக்ரந்தி பூஜை!வரலட்சுமி பூஜை செய்பவர்கள், முதலில் விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். ஒன்பது முடிச்சு இட்ட, மஞ்சள் தடவிய நோன்புச்சரடை வரலட்சுமிக்கு அணிவிக்கவேண்டும். அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பூஜை செய்ய வேண்டும். பின் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது மணிக்கட்டிலும் கயிறை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள அனைவருக்கும் குடும்பத்தலைவியே கட்டி விட வேண்டும். இந்த வழிபாட்டிற்கு 'தோரக்ரந்தி பூஜை' என்று பெயர். புனர்பூஜை செய்யுங்க! வரலட்சுமி விரதத்தன்று மாலையில் வரலட்சுமிக்கு தூபதீபம், கற்பூரம் காட்டி வணங்க வேண்டும். பின் ஆரத்தி எடுக்கவேண்டும். வீட்டுக்கு அழைத்த சுமங்கலிகளுக்கு வெற்றிலைபாக்கு, தாம்பூலம்,உடை கொடுத்து வழியனுப்ப வேண்டும். நிவேதனம் செய்த பலகார வகைகளை இரவில் சாப்பிடவேண்டும். அடுத்த நாள் காலையில் மறுபூஜை செய்ய வேண்டும். இதற்கு புனர்பூஜை என்று பெயர். இதனைச் செய்ய இயலாதவர்கள் முதல்நாளே சுண்டல் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்யலாம். அரிசிப்பானையில் கலசம்!வரலட்சுமி பூஜையில் கலசம் வைப்பதுண்டு. இதை அன்று இரவில் அரிசி பாத்திரத்தில் வைக்கவேண்டும். இதனால், வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம். கலசத்தில் இருந்த தேங்காயை, மறுவெள்ளியன்று பால்பாயசம் செய்ய பயன்படுத்தலாம். விரதம் இருந்த அனைவரும் இந்த பாயசத்தைப் பருகுவது அவசியம்.விரத பலன்கள்சுமங்கலிப்பெண்கள் மேற்கொள்ளும் வரலட்சுமி விரதத்தால் வீட்டில் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். லட்சுமி அருளால் செல்வவளம் பெருகும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் மணவாழ்வு உண்டாகும்.