மாங்கல்யம் காத்திடுவாள் மகிமை பல புரிந்திடுவாள்
தீர்க்க சுமங்கலி பாக்கியத்திற்காக, திருமங்கலக்குடி மங்களாம்பிகைக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யலாம். தல வரலாறு:ஒருசமயம் காலமாமுனிவருக்கு உண்டாக விருந்த தொழுநோயை நவக்கிரகங்கள் தடுத்ததால், அந்நோய் கிரகங்களுக்கு பிடிக்கும் என பிரம்மா சாபம் கொடுத்தார். எனவே, அவர்கள் இத்தலம் வந்து சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்த சிவனை வேண்டி, தவமிருந்து சாபவிமோசனம் பெற்றனர்.பஞ்சமங்கள க்ஷேத்ரம்:பிராணநாதர் கோயிலிலுள்ள சுவாமி விமானம் மங்கள விமானம், அம்பிகை மங்களாம்பிகை, தல விநாயகர் மங்கள விநாயகர், தீர்த்தம் மங்கள தீர்த்தம், தலம் திருமங்களக்குடி ( மங்கலமாக திரிந்தது) என அனைத்தும் மங்களம் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. எனவே இதனை 'பஞ்சமங்கள க்ஷேத்ரம்' என்றழைக்கிறார்கள். சம்பந்தர், நாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம்.குலோத்துங்க சோழ மன்னனின் மந்திரி தீவிர சிவ பக்தர். ஒருசமயம் அவர் வரிப்பணத்தைக் கொண்டு, இக்கோயில் திருப்பணி வேலைகளை செய்துவிட்டார். இதுபற்றி மன்னரிடம் சொல்லவில்லை. கோபம் கொண்ட மன்னன் மந்திரிக்கு மரண தண்டனை விதித்தான். மந்திரி சற்றும் கவலைப்படவில்லை. தான் இறந்தபின்பு, கோயிலில் அடக்கம் செய்ய வேண்டுமென வேண்டுகோள் மட்டும் வைத்தார். மன்னனும் ஏற்றான். இதனிடையே தனக்கு மாங்கல்ய பாக்கியம் நீடிக்க அருளும்படி அம்பிகையிடம் வேண்டினாள் மந்திரி மனைவி. அவளுக்கு இரங்கிய அம்பிகை, பக்தனுக்கு உயிர்ப்பிச்சை தரும்படி சிவனிடம் முறையிட்டாள். அவரும் ஏற்றார். தண்டனை நிறைவேறியதும் மந்திரியின் உடலை கோயிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது சிவன் அவருக்கு உயிர் கொடுத்து, திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். பக்தனுக்கு பிராணன் (உயிர்) கொடுத்ததால் சுவாமி, 'பிராணன் கொடுத்த பிராணநாதர்' என்றும், அம்பிகை 'மங்களாம்பிகை' என்றும் பெயர் பெற்றனர். மகாபாரதத்தில் வரும் புருஷாமிருகம் இங்கு ”வாமிக்கு வாகனமாக உள்ளது.நின்ற லிங்கம்:பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இங்கு பாணம், ஆவுடையாரைவிட உயரமாக இருக்கிறது. குட்டையான அகத்தியர் இங்கு வந்தபோது அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம். இதனால், பாணம் உயர்ந்ததாகச் சொல்கிறார்கள்.எருக்கு இலையில் தயிர் சாதம்:நவக்கிரகங்கள் இங்கு சிவனுக்கு எருக்க இலையில் தயிர் சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இங்கு ஒவ்வொரு ஞாயிறும், உச்சிகால பூஜையின்போது, உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு நைவேத்யம் செய்கின்றனர். பித்ரு தோஷம் (முன்னோருக்கு முறையான தர்ப்பணம் போன்ற சடங்கு செய்யாதவர்கள்) உள்ளவர்கள் சுவாமிக்கு தயிர்சாத நைவேத்யம் படைத்து வழிபட்டாலும் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.மரகதலிங்கம்:நடராஜர் சந்நிதியிலுள்ள மரகதலிங்கத்திற்கு. தினமும் உச்சிக்காலத்தில் பூஜை செய்கின்றனர். வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைத்து, வலம்புரி சங்கால் பால், பன்னீர், தேன், சந்தனம் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.தாலி பாக்கிய தாய்:அம்பிகை மங்களாம்பிகை தெற்கு நோக்கி அருளுகிறாள். இவளது பெயரே கோயிலுக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. வலது கையில் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு, இதைப் பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும். சுமங்கலிப்பெண்கள், இதை அணிந்து கொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாளிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இதனால் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. தீர்க்க சுமங்கலி பாக்கியத்திற்கு அம்பாளுக்கு சந்தனக்காப்பும் செய்வர். இதற்கு கட்டணம் ரூ.1500.திறக்கும் நேரம்:காலை 6.30- மதியம்12.30,மாலை4-இரவு 8.30.இருப்பிடம்:கும்பகோணத்தில் இருந்து 14 கி.மீ., தூரத்தில் ஆடுதுறை. அங்கிருந்து 3 கி.மீ., சென்றால் திருமங்கலக்குடி. அருகில் சூரியனார்கோயில் உள்ளது.போன்:0435- 247 0480.