மருதமலை மாமணியே முருகையா
முருகன் அவதரித்த வைகாசி விசாக நாளில் மருதமலை மாமணி முருகனுக்கு பால்குட அபிேஷகம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். தல வரலாறு: பாம்பாட்டிச்சித்தர், பாம்புக்கடிக்கு மருத்துவம் செய்தார். ஒரு சமயம் அவர், நாகரத்தின பாம்பு ஒன்றைத் தேடி மருத மலைக்கு வந்தார். அப்போது சட்டைமுனிவர் அவருக்கு காட்சி தந்து, ''ஆன்மிக வாழ்வில் ஈடுபட்டு, உடலின் ஆதார சக்தியான குண்டலினி என்னும் பாம்பை கண்டறிவதே பிறவியின் நோக்கம். அதை விட்டு காட்டில் திரியும் பாம்புகளை தேடி அலைவது வீண் வேலை!” என்றார். அதைக் கேட்ட பாம்பாட்டிச்சித்தர், உயிர்களைத் துன்புறுத்துவதில்லை என்ற முடிவு செய்ததோடு, முருகனை நோக்கி தவமிருந்தார். அவருக்கு வள்ளி, தெய்வானைஉடன் காட்சி தந்த முருகன் ஞான உபதேசம் செய்தார். இதனடிப்படையில் இத்தலத்தில் முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. பழநிமலையில் இருப்பதைப் போல, கையில் தண்டத்துடன், இடது கையை இடுப்பில் வைத்தபடி காட்சியளிக்கும் சுவாமி, தண்டபாணி என அழைக்கப்படுகிறார். தலைக்கு பின்புறம் குடுமி வைத்திருக்கும் இவர், காலில் தண்டை என்னும் ஆபரணம் அணிந்திருக்கிறார். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பில் இருக்கும் இவர், விசேஷ நாட்களில் வெள்ளிக் கவசத்திலும், கார்த்திகை, தைப்பூசத்தன்று மட்டும் தங்கக் கவசத்திலும் அருள்பாலிக்கிறார். அர்த்தஜாம பூஜையின் போது ஆபரணம் ஏதும் அணியாமல், வேட்டி மட்டும் அணிகிறார். அருணகிரியாரால் பாடல் பெற்ற இத்தலம் 'ஏழாம்படை வீடு' எனப்படுகிறது. விருப்பம் நிறைவேற விரதமிருந்து வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு பால் அபிஷேகத்தை பக்தர்கள் செய்கின்றனர்.மருத மரங்கள் நிறைந்த மலை என்பதால் முருகனுக்கு 'மருதாச்சல மூர்த்தி' என்று பெயர். அபிஷேகத்திற்கு மலையிலுள்ள மருததீர்த்தம் பயன்படுகிறது. நாகர் சிலையை முருகனாக கருதி வழிபடு கின்றனர். இதன் பின்புறம் பீடத்தின் மீதுள்ள மூன்று வடிவங்களை சிவன், விநாயகர், பார்வதியாக கருதி பூஜிக்கின்றனர். சிவன், அம்மனுக்கு நடுவில் முருகன் இருக்க, இங்கோ விநாயகர் இருக்கிறார். ஆதிமுருகன் சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் சுயம்பு வடிவில் இருக்கிறார். வள்ளி உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் உள்ளனர். 837 படிகள் கொண்ட மலையின் அடியில் தான்தோன்றி விநாயகர் சன்னதி உள்ளது. யானைத்தலை மட்டும் உள்ள இவருக்கு உடல் இல்லை. 'தம்பிக்கு உகந்த விநாயகர்' எனப்படும் இவருக்கு கார்த்திகை, சஷ்டி, விசாகம், அமாவாசையன்று பூஜை நடக்கிறது.எப்படி செல்வது : கோயம்புத்துாரில் இருந்து 14 கி.மீ.,விசேஷ நாட்கள்: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம்நேரம்: காலை 5:30 - 1:00 மணி ; மதியம் 2:00 - 8:30 மணிதொடர்புக்கு: 0422 - 242 2490அருகிலுள்ள தலம்: கோயம்புத்துார் கோனியம்மன் கோயில்