நவராத்திரி பிரார்த்தனை
நவராத்திரி துவங்கியுள்ள இந்நேரத்தில் தினமும் மாலையில், அம்பாள் முன் அமர்ந்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி அவளது நல்லருள் பெறுங்கள்.* காலையில் மலரும் தாமரை மலர் போன்ற கைகளை உடையவளே! எப்போதும் தயை புரிபவளே! இரண்டற்ற ஒரே சக்தியாக இருப்பவளே! இந்திரனால் வணங்கப்பட்டவளே! சிறந்த ஒளி வீசும் குண்டலங்கள் அணிந்தவளே! மன உறுதியைத் தருபவளே! நீ விரலில் அணிந்திருக்கும் மோதிரத்திலுள்ள ரத்தினத்தின் இளம்சிவப்பு நிறத்தால் உன் நகங்கள் ஒளிர்கின்றன. சிறப்பு மிக்க உனது அருளை வேண்டுகிறேன்.* கையில் வீணை வைத்திருப்பவளே! பக்தர்களுக்கு செல்வத்தைக் கொடுப்பவளே! மூன்று உலகங்களாலும் வணங்கப்படுபவளே! இனிமையாகப் பேசுபவளே! நட்சத்திர வரிசை போல் விளங்கும் முத்துமாலையின் ஒளியால் பிரகாசிப்பவளே! மாட்சிமை மிகக்க உன் அருளை வேண்டுகிறேன்.* தெய்வீக ரத்தினங்கள் இழைத்த ஆடையணிந்தவளே! சந்திரனைப் போல் குளிர்ந்தவளே! சியாமளா தேவியே! தடையில்லாத பேரின்பத்தை அள்ளித் தருபவளே! மாசற்ற மாணிக்கமே! பூவரசம்பூ போன்ற சிறந்த பட்டாடை அணிந்தவளே! நீலதாமரை போன்ற அழகிய கால்களை உடையவளே! இன்பமே வடிவான உன் அருளை வேண்டுகிறேன். * எல்லாருடைய விருப்பங்களையும் நிறைவேற்றுபவளே! களங்கமற்றவளே! எல்லா செல்வங்களையும் வாரி வழங்குபவளே! சித்தர்களால் போற்றப்படுபவளே! காளியே! மந்திரங்களின் வடிவே! மாண்புமிக்க நீ எங்களுக்கு செல்வத்தையும், கல்வியையும், ஆற்றலையும் அருள்வாயாக.* மங்கள நாயகியே! அழகாக மெல்ல நடப்பவளே! நல்ல கலைகளின் இருப்பிடமே! சந்திரோதயத்தின் ஒளி வெள்ளத்தால் நனைந்த பாற்கடலில் இருந்து தோன்றிய சங்கு போன்ற கழுத்தை உடையவளே! ஒளி பொருந்திய முத்துமாலை அணிந்து ஜொலிப்பவளே! நவரத்தின ஆசனத்தில் வீற்றிருப்பவளே! பூமியின் அரசியே! பக்தி நிறைந்தவளே! சவுபாக்கியம் தருபவளே! கிளியுடன் விளையாடிக் கொண்டிருப்பவளே! உனது அருளால் எங்கள் வம்சம் தழைக்கட்டும்.* அம்பிகையே! தினமும் பல நல்ல செயல்பாடுகளில் இறங்கும் எனக்கு, கடல் கூட ஆழமற்ற விளையாட்டு மைதானம் போல் ஆகி விடட்டும். இந்திரனின் தேவலோகத் தோட்டம் கூட நான் எட்டிப் பிடிக்க கூடியதாகட்டும். இந்த பூலோகம் மங்களகரமான சிம்மாசனம் ஆகட்டும். நீ இத்தகைய விருப்பங்களையெல்லாம் விரும்பி நிறைவேற்றுபவள் என்பதால் இவற்றையெல்லாம் உன்னிடம் சொல்கிறேன்.* லோகநாயகியே! எல்லாப் புண்ணிய தீர்த்தங்களின் வடிவே! வேதத்தின் சாரமே! ஆகம சாஸ்திரங்களின் அரசியே! யந்திரங்களாகவும், சக்ரங்களாகவும் விளங்குபவளே! என் பாவங்களை மன்னித்து அருள் செய். என்னை வெற்றி வீரனாக்கி அழகு பார்! உனக்கு என் வந்தனம்.* எல்லா சக்திகளாகவும் விளங்குபவளே! எல்லா பீடங்களாகவும் இருப்பவளே! தத்துவமுத்தே! வித்தைகளெல்லாம் அறிந்தவளே! இசையில் புதைந்துள்ள இன்பமே! நவராத்திரி நாயகியே! இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் எனக்கு நன்மைகளைப் பொழிவாயாக.* எங்கும் நிறைந்தவளே! எங்கும் செல்பவளே! எல்லாவற்றிலும் உட்பொருளாக விளங்கும் ஜெகன்மாதாவே! எல்லா இக்கட்டுகளில் இருந்தும் என்னை விடுவித்து காப்பாற்றி அருள் செய். தேவி! உனக்கு நமஸ்காரம், உனக்கு நமஸ்காரம், உனக்கு நமஸ்காரம்.