நினைத்ததை நடத்தி தருவாள் நெமிலி பாலா!
நம்மை குழந்தையைப் போல் பார்த்துக் கொள்பவள்தான் அன்னை பராசக்தி. இவள் காஞ்சியில் காமாட்சியாகவும், மதுரையில் மீனாட்சியாகவும், திருநெல்வேலியில் காந்திமதியாகவும், சங்கரன்கோவிலில் கோமதியாகவும் இருந்து அருள்பாலிக்கிறாள். இப்படி இருக்கும்போது அன்னை நமக்கு குழந்தையாக காட்சி தந்தால் எப்படி இருக்கும்? அவள்தான் ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள நெமிலியில் அருள்மழை பொழிகிறாள். வேலுாரில் வாழ்ந்து வந்தவர் வேத வித்தகரான ராமசுவாமி ஐயர். குடும்பத்துடன் ஊரை விட்டு வெளியேறி, நெமிலியை வந்தடைந்தார். அங்கே சத்திரம் ஒன்றை பார்த்ததும், 'வீடு கிடைக்கும் வரை, இங்கேயே தங்கலாம்' என முடிவெடுத்து உள்ளே சென்றபோது, 'இங்கே பேய் நடமாட்டம் உள்ளது. போய்விடுங்கள்' என அருகில் இருந்தவர்கள் எச்சரித்தனர். எதையும் காதில் வாங்காமல், அன்னை பராசக்தியின் மீதுள்ள நம்பிக்கையால் அங்கே தங்கினார். பின் அவரது மனைவி சத்திரத்தை சுத்தம் செய்து தீபமேற்றினார். ராமசுவாமியைத் தவிர அனைவரும் உறங்கினர். அவரோ மந்திரங்களை பாராயணம் செய்தார். பொழுது புலர்ந்தது. 'தெய்வ சக்தி இவர்களிடம் உள்ளது' என மக்கள் வியந்து, அவர்களுக்கு உதவி செய்தனர். ராமசுவாமியைப்போல் அவரது மகனான சுப்ரமணியனும் வேதங்களை கற்றுத் தேர்ந்தார். ஒருநாள் இவரது கனவில் தோன்றிய சிறுமி, 'பாலாவாகிய நான் ஆற்றில் மிதந்து வருகிறேன். என்னை உனது இல்லத்தில் வைத்து பூஜை செய்' என்றாள். அதன்படி குசஸ்தலை ஆற்றிற்கு சென்றவருக்கு வருத்தமே மிஞ்சியது. ஆம்! இரண்டு நாளாக தேடியும் விக்ரகம் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் அம்பாளை பிரார்த்தித்தவாறு ஆற்றில் மூழ்கினார். அப்போது சுண்டுவிரல் அளவில் விக்ரகம் ஒன்று அவரது கையில் தவழ்ந்தது. பின் அவரது வீட்டையே கோயிலாக கருதி அங்குக் குடியேறினாள் பாலா. அன்று முதல் இவரது வீடே பாலா பீடமானது. நவராத்திரி சமயத்தில் நலம் பயக்க வந்தவள் தான் பாலா. இதனால் இங்கு நவராத்திரி உற்ஸவம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது ஒன்பது நாட்களும் பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி அலங்காரத்தில் காட்சி தருகிறாள். அந்நாளில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. மாதத்தின் முதல் ஞாயிறு, தை, ஆடி வெள்ளியில் சிறப்பு வழிபாடு உண்டு. 1945ல் பாலாவை தரிசிக்க வந்தார் காஞ்சி மஹாபெரியவர். அப்போது அவர், 'தனிப்பட்ட குடும்பத்தினரின் இல்லம் என்றாலும், அனைவரும் வந்து வழிபடுகின்றனர். இந்த ஆன்மிகப் பணியை மனங்குளிரப் போற்றுகிறேன்' என்று பாராட்டியுள்ளார்.மனத்தினில் நிம்மதி வேண்டியே என்னிடம்ஒருமுறை வந்தால் போதும்! மறுமுறை நீயும் வருவதாய் இருந்தால் பிறர் நலம் வேண்டிட வேண்டும்! என்பது பாலா வாக்கு. அதாவது நல்ல மனதுடன் அம்பாளை தரிசனம் செய்தால், நினைத்தது நிறைவேறும். கல்வி, செல்வம், திருமண பாக்கியம், குழந்தைப்பேறு, தொழில் வளர்ச்சி என்று சகல சவுபாக்கியங்களை அருளும் சக்தி இவள்.அரக்கோணத்தில் இருந்து 16 கி.மீ., காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ., துாரத்திலும் கோயில் உள்ளது. 04177 - 247 216, 99941 18044, 99941 25262 என்ற எண்களில் தொடர்பு கொண்டு உறுதி செய்தபின் (காலை 9:00 - மதியம் 2:00 மணி) தரிசிக்கலாம்.