உள்ளூர் செய்திகள்

வடக்கு பார்த்த சிவாலயம்!

பொதுவாக கோயில்கள் கிழக்கு பார்த்து இருப்பது மரபு. மேற்கு நோக்கி சில உள்ளன. ஆனால், வடக்கு நோக்கிய நிலையில், குளித்தலை கடம்பவனநாதர் கோயில் மட்டுமே தமிழகத்தில் இருக்கிறது. இங்கு தைப்பூச விழா சிறப்பு.தல வரலாறு:தூம்ரலோசனன் என்ற அசுரன், தேவர்களை துன்பப்படுத்தினான். தங்களைக் காப்பாற்றும்படி அம்பாளிடம் அவர்கள் வேண்டினர். அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அவனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால், துர்க்கையுடன் சமபலத்துடன் மோதவே, சப்த கன்னிகளாக (ஏழுசக்திகள்) உருவெடுத்து அசுரனுடன் போர் புரிந்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன், கார்த்தியாயன மகரிஷியின் ஆஸ்ரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்த கன்னிகளும் ஆஸ்ரமத்திற்குள் சென்றனர். தூம்ரலோசனன் தான், கார்த்தியாயன முனிவரைப் போல உருமாறி அமர்ந்திருப்பதாக கருதிய அவர்கள், அவரைக் கொன்று விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அறியாமல் செய்த இந்தப்பாவம் நீங்க, சிவனை வேண்டி தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்ததுடன், தூம்ரலோசனையையும் அழித்தார்.கருவறையில் சப்தகன்னிகள்:சிவாலயங்களில் சப்த கன்னியர் தனியாக சந்நிதியில் இருப்பர். ஆனால், இங்கு கருவறையில் லிங்கத்திற்கு பின் புறம் இருக்கின்றனர். சுவாமிக்கு பின்புறம் இருக்கும் சாமுண்டியை, துர்க்கையாக கருதுகின்றனர். இதனால், ராகுகாலத்தில் சிவன் சந்நிதியிலேயே எலுமிச்சை விளக்கேற்றுகின்றனர்.தைப்பூச தரிசனம்:இக்கோயிலில் சிவன்,வடக்கு நோக்கி இருக்கிறார். கோயில் எதிரே அகண்ட காவிரி ஓடுகிறது. சப்த கன்னிகளுக்கு சிவன், தைப்பூசத்தன்று காட்சி கொடுத்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் இவர் காவிரியில், அம்பாளுடன் எழுந்தருள்கிறார். இவருடன் சுற்றுப்பகுதியில் உள்ள ஏழு சிவன் கோயில்களில் இருந்தும் சப்பரம் பவனி வரும். ஒரே நாளில் அஷ்டசிவ தரிசனம் பெறுவது காணற்கரிய நிகழ்ச்சி. ஐப்பசியில் துலாஸ்நான விழா கொண்டாடப்படுகிறது.அருகிலுள்ள தலங்கள்:இந்தக் கோயிலின் அருகேயுள்ள ரத்தினகிரி, ஈங்கோய் மலையிலும் சிவன் கோயில்கள் உள்ளன. 'காலையில் குளித்தலை கடம்பர், மதியம் ரத்தினகிரி சொக்கர் கோயில் (8 கி.மீ.,), மாலையில் ஈங்கோய்மலை மரகதநாதர் கோயில் (5 கி.மீ.,) என்ற வரிசையில் வழிபட்டால் குறைவில்லாத பலன் கிடைக்கும். சல்யூட் அடிப்பவர்:இத்தலத்திற்கு 'தட்சிணகாசி' என்ற பெயர் உண்டு. அம்பாள் முற்றிலா முலையம்மை கிழக்கு பார்த்து இருக்கிறாள். 'பரமநாதர்' என்ற காவல் தெய்வம், வலது கையை நெற்றி மேல் வைத்து, இங்கு வரும் பக்தர்களுக்கு சல்யூட் அடிக்கும் விதத்தில், வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். இவருக்கு தேன் அபிஷேகம் செய்து, பாசிப்பருப்பு பாயசம் படைத்து வழிபட்டால், குடும்பத்திற்கு பாதுகாப்பாக இருப்பார்.இரட்டை நடராஜர்:முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். 'ஆறுபடைகளிலும் இருக்கும் முருகனைப் போன்ற அமைப்புடையவர்' என்ற பொருளில் இவரைக் குறித்து அருணகிரியார் பாடியுள்ளார். இக்கோயிலில் இரண்டு நடராஜர்கள் இருக்கின்றனர். ஒருவரது பாதத்தின் கீழ் முயலகன் இல்லை.தலையில் பிறைச்சந்திரன் உள்ளது. நடராஜரின் முகங்களும் மாறுபட்ட திசையில் உள்ளன.கோயில் அமைப்பு:தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர் மேற்கு முகமாகவும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா கிழக்கு முகமாகவும் இருக்கின்றனர். நவக்கிரக சந்நிதி அருகே சுவரில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முருகனையும், நவக்கிரக மண்டபத்தில் செவ்வாயையும் வழிபடுகின்றனர்.இருப்பிடம்:கரூரில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் குளித்தலை. பஸ் ஸ்டாண்டில் இருந்து சிறிது தூரத்தில் கோயில்.நடை திறப்பு:காலை 6 - பகல் 1, மாலை 5 -இரவு 9.போன்:04323 225 228.