உள்ளூர் செய்திகள்

அங்கவஸ்திரம் இல்லாத பெருமாள்

கேரள மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் திருவல்லா திருவாழ்மார்பன் கோயிலில் அங்கவஸ்திரம் அணியாமல் பெருமாள் பிரம்மச்சாரியாக இருக்கிறார். ஆண்டுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே பெண்கள் இவரை தரிசிக்க கருவறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்னும் பக்தை வாழ்ந்தார். இவர் ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளை தரிசித்து மறுநாள் துவாதசியன்று அன்னதானம் செய்வார். கோயிலுக்கு வரும் வழியிலுள்ள காட்டில் தோலாகாசுரன் என்பவன் அம்மையாருக்கு இடையூறு செய்து வந்தான். இது குறித்து பெருமாளிடம் முறையிட்டார். இதன்பிறகு அம்மையார் காட்டு வழியில் பிரம்மச்சாரி ஒருவன் அசுரனுடன் போரிடுவதைக் கண்டார். அவனைக் கொன்றதும் பிரம்மச்சாரி மறைந்தார். பின் கோயிலுக்கு வந்த போது, காட்டில் பார்த்த பிரம்மச்சாரி கோலத்திலேயே பெருமாளை கண்டு நெகிழ்ந்தார். பிரம்மச்சாரிகள் அங்கவஸ்திரம் அணியாததன் அடையாளமாக இங்கு மேலாடை இன்றி காட்சியளிக்கிறார். அவரது மார்பில் திரு (லட்சுமி) குடியிருப்பதால் 'திருவாழ்மார்பன்' எனப்படுகிறார். இங்கு பெருமாளின் மார்பு தரிசனம் சிறப்பாக கருதப்படுகிறது.சங்கரமங்கலத்தம்மையார் ஒருமுறை ஏகாதசி விரதம் முடித்தபின் சாப்பிட வைத்திருந்த உப்பு மாங்காயை பெருமாள் கேட்கவே கமுகு இலையில் மாங்காயை வைத்து கொடுத்தார். இதனடிப்படையில் தினசரி பூஜையில் கமுகு இலையில் சாதம், உப்புமாங்காய் நைவேத்யம் செய்கின்றனர். செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் தனி சன்னதியில் இருக்கிறார்.மார்கழித் திருவாதிரை, சித்திரை விஷு தவிர்த்த மற்ற நாட்களில் கருவறையில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. சன்னதிக்கு வெளியில் மட்டுமே நின்று தரிசிக்கலாம். மார்கழி திருவாதிரையன்று சிவபெருமான் இவரைக் காண வந்ததன் அடிப்படையில் சந்தனம், விபூதி தரப்படுகிறது. இவரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். பெருமாளுக்கு எதிரில் தங்க கவசத்துடன் கருடாழ்வார் 50 அடி உயர கல் துாண் மீது பறக்கும் நிலையில் உள்ளார். பக்தர்கள் வேண்டுதல் வைத்ததும் பெருமாளை சுமந்து செல்ல தயார் நிலையில் கருடன் இப்படி நிற்கிறார். குழந்தை இல்லாதவர்கள் கதகளி நடனம் நடத்துவதாக வேண்டிக் கொள்கின்றனர். அதற்காக 'கலாக்ஷேத்ரா' என்னும் நடனக்குழு இங்குள்ளது. எப்படி செல்வது: கேரளா பத்தனம்திட்டையில் இருந்து 27 கி.மீ., துாரத்தில் திருவல்லா.விசேஷ நாள்: மாசியில் பிரம்மோற்ஸவம் உத்திரட்டாதியில் கொடியேற்றி பூசத்தில் ஆறாட்டு.நேரம்: அதிகாலை 4:00 - 11:30 மணி மாலை 5:00 - 8:00 மணி தொடர்புக்கு : 0469 - 270 0191அருகிலுள்ள தலம்: 24 கி.மீ.,ல் திருக்கடித்தானம் அற்புதநாராயணர் கோயில்நேரம்: அதிகாலை 5:00 - 11:00 மணி மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 0481 - 244 8455