ராகு கேது பெயர்ச்சிக்கு புறப்படுங்க!
UPDATED : ஆக 29, 2020 | ADDED : ஆக 29, 2020
செப். 1 ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம், வைத்தீஸ்வரன் கோவில் அருகிலுள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்களுக்கு சென்று வரலாம்.திருநாகேஸ்வரம்சுசீல முனிவரின் மகன் சுகர்மன், வனத்தின் வழியே சென்ற போது, நாக அரசனான தட்சகன் என்ற பாம்பு தீண்டியது. தன் மகனை தீண்டிய தட்சகனை, மனிதனாகப் பிறக்கும்படி முனிவர் சபித்தார். சாப விமோசனம் பெற தட்சகன், சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். நாகமாகிய தட்சகனுக்கு அருளியதால் சுவாமிக்கு,'நாகநாதர்' எனப் பெயர் வந்தது.இங்குள்ள அம்பிகை பெயர் கிரிகுஜாம்பிகை. இவர் சரஸ்வதி, லட்சுமி ஆகிய இருவருடனும் ஒரே சன்னதியில் வீற்றிருக்கிறார். ராகு தன் மனைவியர் நாகவல்லி, நாகக்கன்னியுடன் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். இது தவிர விநாயகரும், யோகராகுவும் ஒரே சன்னதியில் உள்ளனர். இவர்களை வணங்கினால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும்.நாகதோஷம் உள்ளவர்கள் ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர். எப்படி செல்வது: கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., துாரத்தில் திருநாகேஸ்வரம்விசேஷ நாட்கள்: கார்த்திகை பிரம்மோற்ஸவம், ஞாயிறன்று ராகுகால பூஜை, ராகுகேது பெயர்ச்சிநேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 0435 - 246 3354 அருகிலுள்ள தலம்: உப்பிலியப்பன் கோயில் 1 கி.மீ.,கீழப்பெரும்பள்ளம்நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் கிராமத்திலுள்ள நாகநாதர் கோயில் கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, வாசுகி என்னும் நாகத்தை கயிறாக பயன்படுத்த, விஷத்தை உமிழ்ந்தது. அதனால் உலகமே ஸ்தம்பித்தது. தேவர்கள் பயத்துடன் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை காப்பாற்றினார்.சிவபெருமான் விஷம் அருந்தியதைக் கண்ட வாசுகி வருத்தம் கொண்டது. சிவனுக்கு தன்னால் ஏற்பட்ட துன்பத்திற்கு பிராயச்சித்தம் தேட தவமிருந்தது. மனம் இரங்கிய சிவனும், விமோசனம் கொடுத்தார். அவரே நாகநாத சுவாமியாக இங்கு வீற்றிருக்கிறார். கேது பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. கேது தோஷம் நீங்க எமகண்ட நேரத்தில் அபிஷேகம் செய்கின்றனர்.எப்படி செல்வது : பூம்புகார் சாலையில் 22 கி.மீ., துாரத்தில் தர்மகுளம். அங்கிருந்து வலப்புறமாகத் திரும்பி 1 கி.மீ துாரத்தில் கீழப்பெரும்பள்ளம்விசேஷ நாட்கள்: மகாசிவராத்திரி, பங்குனியில் வாசுகி உற்ஸவம்நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 3:30 - 08:30 மணிதொடர்புக்கு: 04364 - 260 088அருகிலுள்ள தலம்: வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதர் கோயில் 20 கி.மீ.,