பிராயச்சித்தம் தேடுங்க !
பிறருக்கு துரோகம் செய்துவிட்டு, மனசாட்சியின் பிடியில் மாட்டிக்கொண்டு போராடுபவர்கள், ஆறுதல் பெறுவதற்காக, நாகப்பட்டினம் மாவட்டம் குறுமாணக்குடி கண்ணாயிரமுடையாரைத் தரிசித்து வரலாம்.தல வரலாறு: தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒருமுறை, முனிவரை வஞ்சகமாக வெளியே அனுப்பிவிட்டான். முனிவர் வடிவம் எடுத்து அகலிகையுடன் உறவு கொண்டான். நடந்ததை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, இந்திரனின் உடல் அசுத்தமாகவும், அகலிகை கல்லாகவும் மாற சபித்துவிட்டார். அகலிகை சாப விமோசனம் கேட்க,''ராமரின் திருவடி பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்,''என்றார் முனிவர். இந்திரன் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மனிடம் சென்றான். அதற்கு பிரம்மன் பூலோகத்திலுள்ள குறுமாணக்குடி சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற வழி கூறினார். இந்திரனும் இத்தல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டான். சிவனும் அவனை மன்னித்து அவனது உடலைச் சுத்தமாக்கினார். இந்திரனின் உடலில் ஆயிரம் கண்கள் இருந்ததாகவும், அவற்றை இறைவனே ஏற்றுக்கொண்டதால் 'கண்ணாயிரமுடையார்' என்று இவ்வூர் சிவனுக்கு பெயர் வந்ததாகவும் சொல்வர்.தல சிறப்பு: தேவாரப்பதிகம் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இத்தலம் 17வது. மாணிக்கவாசகர், சேக்கிழார், ராமலிங்க அடிகளார் தரிசனம் செய்துள்ளனர். மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட வாமனமூர்த்தியாகிய குறுமாணி, இவ்வூர் சிவனை வழிபட்டதால் இத்தலம் 'குறுமாணக்குடி' எனப்படுகிறது.குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அர்த்த ஜாம பூஜையில் பால், பழம் நைவேத்யம் செய்து, அன்னதானம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், கண் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இங்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் சிறந்த பலன் உண்டு என்பதும் நம்பிக்கை. இங்குள்ள அம்மன் சன்னதிக்கு மேல், 12 ராசிக்குரிய கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள், அம்மன் முருகுவளர்க்கோதை நாயகிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம். திருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபடவேண்டிய சிறந்த தலம். கார்த்திகை சோமவாரம் இங்கு விசேஷத் திருவிழா. பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் ஒன்று. சம்பந்தர் இத்தலம் குறித்து பாடியுள்ளார். வாழ்க்கையில் தவறு செய்தவர்கள், பிறருக்கு துரோகம் செய்தவர்கள் மனசாட்சியின் உறுத்துதலால் தவிப்பார்கள். அவர்கள் மற்றவர்களிடம் தங்கள் தவறை முறையிட முடியாவிட்டாலும், கண்ணாயிரமுடையாரிடம் முறையிட்டு, தாங்கள் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வதாக வேண்டிக்கொண்டால் மனசாந்தியும் மன்னிப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திறக்கும் நேரம்: காலை 6- 12 மணி, மாலை 3.30- 8 மணி.இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன்கோவில் செல்லும் பஸ்சில் 15 கி.மீ., சென்றால் கதிராமங்கலத்தை அடையலாம். அங்கிருந்து 3 கி.மீ. ஆட்டோவில் சென்றால் குறுமாணக் குடிக்கு கோயிலை அடையலாம்.