சங்கடம் தீர்க்கும் சண்முகபுரம் ஆஞ்சநேயர்
சிலருக்கு கடன் தொல்லை, சிலருக்கு பகைவர்களால் தொல்லை, சிலருக்கு உறவினர்களாலேயே தொல்லை....இப்படி நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் தொல்லைகளை எல்லாம் தீர்ப்பவராக அருள்கிறார் பொள்ளாச்சி அருகிலுள்ள சண்முகபுரம் வீர ஆஞ்சநேயர். தல வரலாறு: ராமனின் மனைவி சீதையை ராவணன் இலங்கைக்கு கடத்திச்சென்ற போது, ஆஞ்சநேயர் சீதையைத் தேடி இலங்கைக்கு சென்றார். இலங்கையில் சீதாதேவியை சந்தித்த பிறகு, அவர் தற்போது கோயில் அமைந்துள்ள பாலாற்றின் வழியாக திரும்பினார். அவர் பறந்து சென்ற வழியின் கீழே பாலாற்றங்கரையில் உள்ள பாறையில் கால்பதித்ததாக ஒரு தகவல் இருக்கிறது. அந்தப் பாறையில் சுயம்புவாக படுத்த நிலையில், கை கூப்பி, அவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இப்பகுதியை சோழமன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் ஆற்றின் நடுவே ஆஞ்சநேயர் சுயம்புவாக இருந்தது கண்டறியப்பட்டு தொடக்கத்தில் சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக செவிவழிச்செய்தி கூறுகிறது. தற்போது கோயில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சிறப்பம்சம்: வீரஆஞ்சநேயர் சுமார் ஐந்து அடி உயரத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அவரது முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தின் அருகே ஓரிடத்தில் சிறிய தீர்த்தம் போன்று நீர் வடிகிறது. அதில் இரண்டு நாகங்கள் இன்றுவரையிலும் எழுந்து நீராடி அவ்வப்போது சுவாமியின் கருவறைக்கு வந்துசெல்வதாக அக்காட்சியைக் காண்பவர்கள் கூறுகின்றனர்.பிரார்த்தனை: இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்குகிறது, எடுத்த செயல்கள் வெற்றியடைகிறது, பயம் நீங்குகிறது, நல்ல புத்தி, உடல் நலம், செயலில் கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்குசாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது. குறிப்பாக கடன் தொல்லை, பகைவர் தொல்லை, உறவினர்களால் ஏற்படும் தொல்லையும் நீங்குவதாக நம்பிக்கை. இரட்டை முகம் கொண்ட துவஜ கணபதி, சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மருக்கும் இங்கு சிலைகள் உள்ளன. நடைதிறப்புநேரம்: காலை 6 -மாலை 6 மணி. இருப்பிடம்: பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் அணைக்கட்டு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சண்முகபுரம் அமைந்துள்ளது. வால்பாறை செல்லும் பஸ்களும் இவ்வூர் வழியாகச் செல்கின்றன.போன்: 04259 - 229 054.