விளக்கேற்றினா தலைதீபாவளி!
அடுத்த வருஷம் என் மகளுக்கு கல்யாணம் முடியணும்! மாப்பிள்ளையோட தலை தீபாவளிக்கு வரணும்!'' என விரும்பும் பெற்றோர், காஞ்சிபுரத்தில் உள்ள திவ்யதேசமான விளக்கொளிப் பெருமாள் கோயிலில் தீபாவளியில் இருந்து ஐந்து நாட்களுக்குள் விளக்கேற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.தலவரலாறு:தீபத்தின் பெருமையை நிலைநாட்ட லட்சுமியும், சரஸ்வதியும் முடிவெடுத்தனர். இதற்குள் இருவருக்குள் யார் சிறந்தவர் என்பது குறித்து தேவர் தலைவனான இந்திரனிடம் அபிப்ராயம் கேட்டு நாடகமாட எண்ணினர். திருமகளின் கடாக்ஷம் இருந்தால் வாழ்வில் எல்லா நலன்களும் உண்டாகும் என்ற எண்ணத்தில் இந்திரன் லட்சுமியை உயர்த்திச் சொல்ல சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டது. இந்திரனைச் சபித்த சரஸ்வதி, தன் கணவரான பிரம்மாவை நாடினாள். பிரம்மாவும் லட்சுமியை பெருமையாகப் பேச, கணவரை விட்டுப் பிரிந்தாள். இந்த நிலையில் சத்தியவிரத தலமான காஞ்சிபுரத்தில் பிரம்மா ஒரு யாகம் தொடங்கினார். சரஸ்வதி யாகத்தைத் தடுக்க எங்கும் இருளால் மூடினாள். பிரம்மா விஷ்ணுவைச் சரணடைய ஒளிவீசும் தீபச்சுடர் போல தோன்றி யாகத்தை நிறைவேற்ற துணை புரிந்தார். அதனால் பெருமாளுக்கு 'தீபப்பிரகாசர்' என்ற பெயர் ஏற்பட்டது. இவரை தமிழில் 'விளக்கொளிப்பெருமாள்' என்று குறிப்பிடுவர். சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தன்று விளக்கொளிப்பெருமாள் அவதரித்த நாள். கோயில் சந்நிதிகள்:மூலவர் விளக்கொளிப்பெருமாள் மேற்குநோக்கி நின்றகோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஸ்ரீகர விமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார். மரகதவல்லித்தாயார், சுவாமிதேசிகன், கருடன், ஆண்டாள், அனந்தாழ்வான், சேனைமுதலியார், ஆழ்வார்கள், ராமானுஜர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. வைணவ சம்பிராயத்தின் தலைமை ஆச்சாரியாரான சுவாமிதேசிகன் அவதரித்த தூப்புல் கோயில் அருகில் உள்ளது. விளக்கேற்றினா தலைதீபாவளி:பெருமாள் தீபப்பிரகாசராக இங்கு விளங்குவதால் தீபாவளிக்கு இங்கு வழிபடுவது சிறப்பு. தீபாவளியன்று பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். தீபாவளி முதல் ஐந்து நாட்களுக்குள் விளக்கேற்றி வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை நீங்கி அடுத்த ஆண்டு தலைதீபாவளியாக அமையும் என்பது ஐதீகம். கண்,காது நோய், மூளைவளர்ச்சி குன்றியவர்கள் தரிசித்தால் நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும்.இருப்பிடம்:காஞ்சிபுரம்- உத்திர மேரூர் சாலையில் 2கி.மீ., திறக்கும்நேரம்:காலை8.30- பகல்11.30, மாலை5- இரவு7.30போன்:94475 73942.சி. வெங்கடேஸ்வரன்