உள்ளூர் செய்திகள்

உலகம்...அழிவுக்கலைகளின் சுரங்கம்.. - வருந்துகிறார் சின்மயானந்தர்

* மனிதன் நேர்மையானவனாக இருக்கும் வரை மட்டுமே எல்லா விஞ்ஞான சாதனைகளும் மனித இனத்திற்கு நன்மை செய்யும். அவன் தன்னுடைய விவேகத்தை இழந்து, வாழ்க்கை நெறிமுறைகளைத் தூக்கி எறிந்தால் மனித சமூகமே அழிவுப் பாதையில் செல்ல நேரிடும். * எங்கு பண்பாட்டுச் சீர்கேடும், கலாச்சார சீரழிவும் இருக்கிறதோ, அங்கு வறுமையைத் தோற்றுவிக்கும் ஆக்கிரமிப்பும் நிச்சயமாக இருக்கும்.* தத்துவம் என்பது தூய விஞ்ஞானமே ஆகும். அதை நடைமுறைக்கு கொண்டு வரும்போது தான் சமயம் அல்லது மதம் என்று பெயர்  பெறுகிறது. * நாகரீகத்தின் அளவுகோல் தான் கலாசாரம். காட்டு மிராண்டித்தனமான சமூகத்திற்கும், நாகரீகமான சமூகத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு கலாசாரத்தில் தான் இருக்கிறது. * உலகம் அழிவுக் கலைகளின் சுரங்கமாக இருக்கிறது. இங்கே, கலாசாரம் சீர்கேடு அடையும் போது அதர்மம் பெருகத் தொடங்கிவிடுகிறது. இன்றைய உலகில் இச்சீர்கேடு வேகமாகப் பரவி வருகிறது. மக்கள் தத்துவங்களை தவறாகப் புரிந்து கொண்டு குழப்பம் கொள்கின்றனர். வருந்தத்தக்க நிலையில் நாம் இன்று இருக்கிறோம்.* புனித விஷயங்களை உள்ளடக்கி நிற்கும் தத்துவங்களை சரியாகத் தெரிந்து கொள்வதும், நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைப்பதும் கல்வி கற்ற ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். * மனிதப்பிறவியே படைப்பின் சிகரமாகும். மனிதனைத் தவிர, உலகம், மிருகங்கள், தாவரங்கள் ஆகிய  அனைத்தும் தாழ்ந்தவையாகவே உள்ளன.* கல் போன்ற மனிதர்களும் உலகில் இருக்கிறார்கள். இவர்கள் உயிரற்ற ஜடப்பொருள்களைப் போன்று புறவுலகப் பாதிப்பில்லாமல் இருக்கின்றனர். சிலர் சோம்பலால் செயல் திறமற்று வாழ்கின்றனர். சிலர் ஆசை மிகுந்தவர்களாய் சுயநலத்தோடு அலைகின்றனர். பலதரப்பட்ட குணம் கொண்ட மனிதர்களிடையே நல்ல இத யம் கொண்ட நல்லவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர். * உலகத்துடன் கலந்து பழகி ஆரோக்கியமான உறவை வளர்த்துக் கொள்ள எண்ணுபவர்கள் முதலில் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். * மனித இயந்திரம் ஒரு மின்விளக்கு அல்லது குளிர்சாதனப்பெட்டி போன்றதே. தானாக பல்ப் எரியவோ அல்லது குளிர்சாதனப்பெட்டியோ இயங்குவதில்லை. மின் ஆற்றல் தான் அவை இயங்க துணை செய்கின்றன. அதுபோல, உடல், மனம், புத்தி ஆகியவையும் வெறும் கருவிகளே. சைதன்யம் என்னும் அறிவுப்பொருளே  இக்கருவிகளை இயக்கச் செய்கிறது.* புலனின்பத்தை எந்தக் காலத்திலும் திருப்திப்படுத்த முடியாது. அவைகளை நாடிச் செல்லும் மனிதன் நாளடைவில் சிற்றின்பமே வாழ்க்கை என்று உழன்று கொண்டேயிருப்பான். இறுதியில் புழுவினைப் போல செத்து மடிவான். * மனிதன், தனக்குள் இருக்கும் உணர்வு மையத்துடன் முதலில் தொடர்பு கொள்ள வேண்டும். அதனுள் தன்னையே ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது அவனுடைய புத்தி விசாலமாகி உயர்மனிதனாக மாறிவிடுவான். விவேகமுள்ளவனாக தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு வழிகாட்டுவான்.  * மனிதன் அடிப்படையில் புனிதமானவனே. ஆனால், அவனுக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மை மனதில் எழும் எண்ணங்கள் மற்றும் ஆசைகளால் மறைக்கப்பட்டு கிடக்கின்றன.