உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோயில்
UPDATED : செப் 17, 2012 | ADDED : செப் 17, 2012
சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரகிரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலை என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், பின் உடுமலைப்பேட்டை என்றானது. இங்குள்ள பிரசன்ன விநாயகர் கோயிலில் காசிவிஸ்வநாதர், பிரம்மன், சவுரிராஜப்பெருமாள் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர். இத்தல விநாயகர் ஆறடி உயரத்தில், ராஜகம்பீர கோலத்தில், ஏகதள விமானத்தின் கீழ் அமர்ந்துள்ளார். மூஷிக வாகனம் பெரிய அளவில் உள்ளது. முன் மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. தேவ விருட்சங்களான வன்னி, வில்வம், அரசு ஆகியன இங்குள்ளன. கிருத்திகையில் வெள்ளித்தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது சிறப்பு.