உள்ளூர் செய்திகள்

கலைமகளே வருக

இன்று சரஸ்வதி பூஜை  நன்னாளையொட்டி,  பூஜை நேரத்தில் சரஸ்வதி ஸ்தோத்திரம் படிப்போமா!உலகத்திலுள்ள 64 கலைகளுக்கும் தலைவியே! அந்தக் கலைகளை என் அறிவிற்கு எட்டச்செய்பவளே! வெண்பளிங்கு போன்ற தூய வடிவமுள்ளவளே! என் மனதில்  வீற்றிருப்பவளே! எனக்கு கல்வி, கேள்விகளில் இடையூறுகளைக் களைந்தெறிவாயாக.பளிங்கு நிறமும், பவளம் போல் சிவந்த வாயும் கொண்டவளே! மணம் கமழும் தாமரைப் பூப்போன்ற கைகளை உடையவளே! உடுக்கைப் போல் இடையுடைய தேவியே! கலைமகளே! உன் திருவுருவத்தை வணங்கும் எனக்கு கவிதைத் திறனை வழங்குவாயாக.வெண்மையான இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் அமர்ந்திருப்பவளே! அழகான சொற்களால் பாடல்கள் எழுதும் அறிவைத் தருபவளே! என் இதயத்தில் எழுந்தருளியிருப்பவளே! பிரம்மதேவனால் விரும்பப்படுபவளே! தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய சரஸ்வதி÷தேவியே! உன்னை வணங்கும் எனக்கு சிறந்த பேரறிவைத் தருவாயாக.  வேதங்கள் நான்கையும் வரிவிடாமல் சொல்பவளே! வில்போன்ற புருவமும், மூங்கிலைப் போன்ற தோளும், பவுர்ணமி நிலவைப் போல் ஒளி வீசும் வெண்மையான திருமேனியும் கொண்டவளே! நீண்ட பெரிய கண்களை உடையவளே! பிரம்மனால் ரசிக்கப்படும் வடிவை உடையவளே! உன்னைப் போல் எனக்கும் பேரழகைத் தருவாயாக.அன்னையே! நீ அமர்ந்திருக்கும் தாமரை மலரின் பெருமையை சொல்லி மாளாது. அது தலைமைப் பண்பைத் தரக்கூடியது. அறிவென்னும் இன்பக்குழந்தையை வழங்குவது! தீவினைகளை மாற்றக்கூடியது. எல்லா உயிர்களுக்கும் தாய்வீடாக விளங்குவது! அந்தமலரின் குணங்களை எனக்குத் தந்தருள்வாயாக. சிவனின் இடப்பாகத்தில் இருக்கிற பார்வதிதேவியும், கங்காதேவியும், லட்சுமியும், இந்திராணியும் மற்றுமுள்ள தெய்வப்பெண்கள் அனைவரும் வேதப்பெண்ணான உன்னை வணங்குகின்றனர். இப்படி எல்லாரலும் வணங்கப்படுவளே! என்னை கலைகளில் சிறக்கச்செய்ய அருள் செய்வாயாக.அழகிய கைகளில் ஓலைச்சுவடி ஏந்தியவளே! வீணாகானம் இசைப்பவளே! ஸ்படிகமாலை அணிந்தவளே!  எல்லா உயிரினங்களையும் உண்டாக்குபவளே! நறுமணம் கொண்ட வெண்தாமரை மலர்மாலையை அணிந்தவளே! உன்னை என்றும் மறவாத மனதைத் தந்தருள்வாயாக.குற்றமில்லாத   சொற்களை வரவழைப்பவளே! உன் மேல் நான் கொண்ட அன்பு அளவிடற்கரியது. நீயிருக்கும் சத்திய லோகத்தை அடைந்து, உன்னை மானசீகமாக வலம் வந்து  போற்றுகிறேன். பாமாலை பாடுகிறேன். இந்த பிரார்த்தனையை ஏற்று என்னையோ, என் குழந்தைகளையோ கல்வியில் சிறந்த மாணவர்கள் ஆக்குவாயாக.கலைச்செல்வியே! என் மனதில் உன்னை நினைக்கும் போதும், நாவால் உன்னைப் பாடும் போதும் முகத்தில் தோன்றும் புன்முறுவல் என்றும் நிலைத்திருக்கட்டும். மனம் தெளிவடைந்து விளங்கட்டும். கலங்கிய ஆற்றுநீர் போன்ற என் அறிவு ஞானஒளி பெற்று பிரகாசமாகட்டும். எங்கள் இல்வாழ்க்கை சிறக்கட்டும். உலகெங்கும் கல்வி சிறக்கட்டும். நல்லறம் தழைக்கட்டும். நாடு வாழட்டும். நன்மையே நடக்கட்டும். உன் திருப்புகழ் வாழ்க வாழ்க என்று போற்றுகிறேன். எங்களுக்கு மங்களத்தை தருவாயாக.