உள்ளூர் செய்திகள்

அம்மாவும் நீயே! அப்பாவும் நீயே! அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!

* உலகம் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காக, சேவையில் ஈடுபடக் கூடாது. மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சேவை செய்ய வேண்டும். * உலக வாழ்வை வெறுத்து ஒதுக்கத் தேவையில்லை. வெறுப்பு கொண்டவனுக்கு உலகில் எந்த இன்பமும் கிடைக்கப் போவதில்லை.* மண்ணில் தோன்றிய பெரியோர்களுக்கும், அவர்கள் போதித்த அறிவுரைக்கும் அளவே கிடையாது. ஆனால், நாகரிக உலகில் மனிதன் அவற்றை புறக்கணிக்கிறான். * 'நாம் அனைவரும் சகோதரர்' என்ற நல்லுணர்வை மனித சமூகம் பெற்று விட்டால், காவல்நிலையம், நீதிமன்றம், அரசாட்சி போன்ற அமைப்புகள் தேவைப்படாது. * மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு உண்டு. ஆறாவது அறிவான பகுத்தறிவே, மற்ற உயிர்களில் இருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுகிறது. * யார் வேண்டுமானாலும் பொருளைத் தேடி விடலாம். ஆனால், அருட்செல்வத்தை அனைவராலும் தேட முடியாது. * கடவுளே நமக்கு அப்பாவாகவும், இயற்கை வளம் மிக்க இந்த பூமி அன்னையாகவும் இருந்து, எல்லா உயிர்களுக்கும் வாழ்வு தரும் தெய்வங்களாக விளங்குகின்றனர். * வாழ்வில் ஆண் ஒரு பாதி என்றால், பெண் மறுபாதியாக இருக்கிறாள். இரண்டும் சேர்ந்தால் தான் முழுமைத்தன்மை பெற முடியும். * எல்லா உயிர்களையும் தன்னைப் போல கருதி அன்பு காட்டி வாழ்வதே, இல்லற வாழ்வின் அடிப்படை பண்பு. * அன்பு வாழும் உள்ளமே தெய்வம் வாழ்வதாகும். அதுவே நிறைவானதும், இன்பமானதும் ஆகும். அன்புச் செல்வத்தின் முன் மற்ற செல்வங்கள் தோற்றுவிடும். * இந்த மனித உடல், அழகு தெய்வம் வாழும் இயற்கைக் கோயில். அதைப் பாதுகாப்பது நம் கடமை. * ஒழுக்கம் உயிரை விட மேலானது. அதுவே மனிதனுக்கு சிறப்பு அனைத்தும் தருகிறது. நல்லொழுக்கம் கொண்டவனின் அழகு அனைவரின் மனதையும் கவர்ந்து விடும். * ஒரு மனிதனையும், அவன் சார்ந்த சமுதாயத்தையும், நாட்டையும் உயர்த்துவது ஒழுக்கமே. * வாழ்வில் ஒழுங்கு இருக்க வேண்டும் என்பது உண்மையானால், தற்கால மேல்நாட்டு நாகரிக மோகத்தை விட்டு விடுவது அவசியம். * கல்வியின் உண்மையான பயன் ஒழுக்கநெறியில் நடப்பது தான். ஒழுக்கமில்லாத கல்வியால் யாருக்கும் பயன் உண்டாகாது. * ஒழுக்கத்தை உயிராகப் போற்றுங்கள். நம்மைக் கரைசேர்க்கும் பலம் ஒழுக்கத்திற்கு மட்டுமே உண்டு. எக்காரணம் கொண்டும் ஒழுக்கத்தை கைவிட்டு விடாதீர்கள். * அடிக்கடி கவலைப்படுவது கொடிய வியாதி. அது உடல்நலனைக் கெடுத்து விடும். * பிறப்பால் உயர்வு, தாழ்வு கருதுவது கூடாது. ஒழுக்கமே மனிதனின் உயர்வு,தாழ்வுக்கு காரணம். * அச்சமுள்ள இடத்தில் வீரம் இருப்பதில்லை. அச்சம் அற்றவனே உண்மையான வீரன் * அன்பு, இரக்கம், கருணை, ஈகை போன்ற மேலான குணங்கள் இல்லாவிட்டால், உலகத்தில் பாவச்சுமை பெருகி விடும். * உலகம் முழுவதும் இயற்கை வளம் நிறைந்திருக்கிறது. இயற்கை செல்வங்களான மலை,காடு, ஆறு என எங்கும் கடவுளின் அருளாட்சியே நடக்கிறது.உருகுகிறார் திரு.வி.க.