உள்ளூர் செய்திகள்

ஒளி நகரம் காசி

காசி என்பதற்கு ஒளி, வெளிச்சம் என்பது பொருள். வருணா, அசி என்னும் நதிகள் கங்கையில் கலப்பதால் காசியை வாரணாசி என்றும், பட்டுக்கு பெயர் பெற்ற ஊர் என்பதால் பனாரஸ் என்றும் அழைக்கின்றனர். முக்தி தரும் ஏழு தலங்களில் முதன்மையானது காசி. ஹிந்துக்களின் புனித நகரமான இது கல்வித்தலமாகவும், ஜோதிர்லிங்கத் தலமாகவும் உள்ளது. கிரகங்களில் ஒருவரான புதன் இங்குள்ள விஸ்வநாதரை வழிபட்டே நவக்கிரக பதவியைப் பெற்றார். கல்விக்கு அதிபதியான புதன் வழிபாடு செய்ததால் இது கல்வித்தலமாக திகழ்கிறது. இங்கு வழிபடுவோர் கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவர். பெற்றோர் குழந்தைகளையும், முதியோர் தங்களின் பேரன், பேத்திகளையும் காசி யாத்திரைக்கு அழைத்து செல்வது மிக அவசியம். கங்கை நதியை சுற்றிவர படகு சவாரியும், காசி நகரத்தைச் சுற்ற பேட்டரி கார் சவாரியும், மிதி வண்டி பயணமும் செயல்படுகிறது. படகு சவாரியின் போது கங்கை படித்துறைகள், நதியின் பிரவாகத்தை ரசித்து மகிழலாம். இதில் தசாஸ்வமேத படித்துறையில் தினமும் மாலையில் நடக்கும் கங்கா ஆரத்தி விசேஷமானது. மூன்று மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்வை ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் தரிசித்து மகிழ்வர். அப்போது ஆன்மிக அதிர்வலைகள் உடலெங்கும் பரவுவதை உணர முடியும். மதம், மொழி, இனப் பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் இதில் பங்கேற்கின்றனர். கரையில் மட்டுமின்றி நதிக்குள் மிதக்கும் படகுகளில் இருந்தும் ஆரத்தியை தரிசிக்கும் வசதி செய்துள்ளனர். படகில் இருந்து பார்த்தால் நம்மை நோக்கியும், கரையில் இருந்து பார்த்தால் கங்கா நதிக்கும் ஆரத்தி நடக்கும் அழகை கண்டு களிக்கலாம். கங்கா தீர்த்தம், பால், பூக்கள் கொண்டு சிவபெருமானுக்கு பக்தர்கள் தாங்களே அபிஷேகம் செய்வது என்பது காசியில் மட்டுமே கிடைக்கும் பரவச அனுபவமாகும். இங்குள்ள அன்னபூரணி கோயில் சிறப்பானது. இங்கு தரும் அரிசி பிரசாதத்தை வீட்டில் வைத்தால் உணவுக்கு பஞ்சம் வராது. தீபாவளியன்று அன்னபூரணி லட்டுத்தேரில் பவனி வருவாள். இங்கு கிடைக்கும் கச்சோரி, குல்பி, லஸ்ஸி உணவு வகைகள் பிரசித்தமானவை. காசி யாத்திரை செல்வோர் கங்கா தீர்த்தச் சொம்பு, காசிக் கயிறு, அன்னபூரணி அரிசி பிரசாதத்தை உறவினர், நண்பர்களுக்கு கொடுத்து மகிழலாம். வாழ்வில் ஒருமுறையாவது காசியை தரிசித்து வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம்.