உள்ளூர் செய்திகள்

குறைந்த செலவில் இறுதி மரியாதை

இறந்தவர்களின் அஸ்தியை கங்கையில் குறைந்த செலவில் கரைக்க ஒரு அரிய வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இதோ தை அமாவாசையை ஒட்டி அதுபற்றிய ஒரு தகவல்!இமயமலை அடிவாரத்தில் கங்கை கரையில் உள்ள புனித தலம் ரிஷிகேஷ். மதுரை, சென்னையில் இருந்து டேராடூன் எக்ஸ்பிரஸ் மூலம் ஹரித்துவார் சென்று, அங்கிருந்து 25 கி.மீ., தூரம் சென்றால் ரிஷிகேஷை அடையலாம். யாத்ரீகர்களுக்கு உதவும் நோக்கில் ரிஷிகேஷ் பிரதான சாலையில் கார்த்திகேய ஆஸ்ரமம் இங்கு செயல்படுகிறது. தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழக பக்தர்கள் இங்கு அதிக அளவில் தங்குகிறார்கள். 80 ஆண்டுக்கு முன் தமிழகத்தைச் சேர்ந்த சுவாமி ஷண்முகானந்தா ரிஷிகேஷ் யாத்திரை வந்த போது, உணவு, தங்குமிடம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளானார். அதன்பின் நன்கொடையாளர்களின் உதவியுடன் ஆஸ்ரமத்தை இங்கு நிறுவினார். அவருக்குப் பின் ஆஸ்ரமப்பணிகளை சுவாமி கைலாசானந்தா மேற்கொண்டார். ஏழு தர்மகர்த்தாக்கள் கொண்ட குழு தற்போது நிர்வாகம் செய்து வருகிறது.இந்த ஆஸ்ரமத்தில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. 1983ம் ஆண்டு முதல் சுவாமி ராகேஷானந்தா சரஸ்வதி, ஆஸ்ரமத்தின் தலைமை குருவாக பணியாற்றி வருகிறார். இவரால் ஆஸ்ரமம் விரிவாக்கம் செய்யப்பட்டு 100 பேர் தங்கும் விதத்தில், 20 அறைகள் கட்டப்பட்டன. தண்டாயுதபாணி கோவிலுக்கு இவரே கும்பாபிஷேகம் நடத்தினார்.ஆஸ்ரமப்பணி குறித்து இவர் கூறும்போது, “பல கஷ்டங்களைக் கடந்து பக்தர்கள், ரிஷிகேஷ் யாத்திரை வருகிறார்கள்.அவர்களுக்கு உணவு, தங்குமிடம் இலவசமாக ஆஸ்ரமத்தின் மூலம் அளிக்கிறோம்.பக்தர்கள் விரும்பி அளிக்கும் நன்கொடை மூலம் சேவையை மேலும் விரிவுபடுத்துகிறோம்,” என்று குறிப்பிட்டார்.ரிஷிகேஷில் ஓடும் கங்கையின் அழகை ரசிக்கும் விதத்தில் இரண்டு கி.மீ. தூரத்திற்கு அழகான சாலை இங்குள்ளது. தினமும் மாலையில் கங்காமாதாவை வழிபடும் விதத்தில் 'கங்கா ஆரத்தி' என்னும் விளக்கு பூஜை நடக்கிறது. அப்போது பாடப்படும் பாடலுக்கு ஏற்ப தீபாராதனை செய்யப்படும். இந்த வழிபாடு காண்போரை பரவசத்தில் ஆழ்த்துகிறது.லட்சுமணன் ஜுவாலா, ராமர் ஜுவாலா என்று அழைக்கப்படும் கங்கையின் இரு கரைகளையும் இணைக்கும் தொங்குபாலம் இங்குள்ளது. 450 அடி நீளமும், 70 அடி உயரமும் கொண்ட கொண்ட இதுவும் காண வேண்டிய ஒன்றாகும்.அஸ்தி கரைப்பு: இறந்தவர்களின் அஸ்தியை காசி, ராமேஸ்வரம் போன்ற புனிதத் தலங்களுக்குச் சென்று கரைப்பது வழக்கம். அஸ்தியைக் கங்கையில் கரைத்தால் இறந்தவருக்கு மோட்சம் உடனடியாக கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் அடிப்படையில், இறந்தவர்களின் அஸ்தியை கார்த்திகேயா ஆஸ்ரமத்திற்கு அனுப்பினால் ஆகம விதிகளின் படி பூஜை செய்து கங்கையில் கரைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.அஸ்தியை அனுப்பும் போது 'First fligt courier' மூலம் அனுப்ப வேண்டும். இறந்தவர் பெயர், ஜாதி, கோத்திரம், நட்சத்திரம், மூன்று தலைமுறை முன்னோர்கள் பெயர் ஆகியவற்றை எழுதி பூஜை செலவுக்காக, 'SRI KARTHIGEYA ASHRAM TRUST' என்ற பெயரில், ரூ.500க்கு வரைவோலை (டிடி) எடுத்து அனுப்ப வேண்டும். முகவரி: SRI KARTHIGEYA ASHRAM TRUST, KOYALGATHI,VEERBHATHRA MARG, RISHIKESH _ 249 201. UTTARGHAND, அலை/தொலைபேசி: 078068 58423, 0135 - 243 6648.