கட்டுச்சாதம் வேண்டுமா?
UPDATED : செப் 02, 2012 | ADDED : செப் 02, 2012
வனவாசமாக காட்டுக்குக் கிளம்பிய ராமன், அன்னை கவுசல்யாவைப் பார்க்கப் போகிறான். அப்போது அவள், கண்ணீர் பெருக்கி மகனின் துக்கத்தை மேலும் அதிகப்படுத்த விரும்பவில்லை. வெளியூர் பயணம் போகும் போது அக்காலத்தில் கட்டுச்சாதம் எடுத்துச் செல்வது வழக்கம். அதுபோல அவளும், பிள்ளைக்கு கொடுத்தனுப்ப விரும்புகிறாள். அதற்காக அவள் புளியோதரையோ, தயிர் சாதமோ தயாரிக்கவில்லை. ''ராகவா! ஒழுக்கத்துடன் நீ பாதுகாத்துவரும் தர்மமே உன்னை என்றென்றும் பாதுகாக்கும்!'' என்றாள். தர்மமே அவள் கொடுத்தனுப்பிய கட்டுச்சாதம். ராமன் விஜயராகவனாக தலை நிமிர்ந்து நிற்கவும், பத்துதலை ராவணன் வீழ்ந்து போகவும் காரணமாக இருந்தது தர்மம் தான். தர்மவழியில் நடந்த ராமனுக்கு வாயில்லா ஜீவன்களான வானரங்கள் கூட துணைவந்தன. அதர்ம வழியில் சென்ற ராவணனுக்கோ, உடன்பிறந்த விபீஷணன் கூட உதவ முன்வரவில்லை.