என்னை ஒழித்துக்கட்ட சதி!
'எனக்கு எதிரிகள், எதிர்க்கட்சியில் இல்லை; எங்கள் கட்சியிலேயே இருக்கின்றனர்...' என, விரக்தியுடன் கூறுகிறார், கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவகுமார்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமையாவிடமிருந்து முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கு சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார், சிவகுமார். இதையறிந்த சித்தராமையா தரப்பினர், சிவகுமார் ஏதாவது ஒரு விஷயத்தில் சிக்க மாட்டாரா என, பெரும் எதிர்பார்ப்புடன் வலை வீசி காத்திருக்கின்றனர். இப்போது அப்படி வீசப்பட்ட வலையில் தான், சிவகுமார் சிக்கியுள்ளார்.சமீபத்தில் கோவையில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில் சிவகுமார் பங்கேற்றார். இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷாவும் பங்கேற்றார். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய சித்தராமையா தரப்பு, 'சிவகுமார் மீது அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் சிக்காமல் இருப்பதற்காக அமித் ஷாவிடம் சமாதானம் பேசுவதற்கு, சிவராத்திரி விழாவை அவர் பயன்படுத்தி உள்ளார்...' என, கொளுத்திப் போட்டுள்ளது. இதனால் கடுப்பான சிவகுமார், 'மதம், வழிபாடு போன்றவை என் தனிப்பட்ட விஷயங்கள். இதில், தேவையில்லாமல் அரசியலை நுழைத்து, என்னை ஒழித்துக் கட்ட சதி செய்கின்றனர்...' என, ஆவேசப்பட்டுள்ளார்.