கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு!
'இவர், கொஞ்சம் ஓவராகத் தான் போகிறார்...' என, மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்திகட்சி தலைவருமான சிராக் பாஸ்வான் குறித்து எரிச்சலுடன் பேசுகின்றனர், பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள். பீஹாரின் மூத்த அரசியல்வாதியான, மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் தான் சிராக். தந்தை மறைவுக்கு பின், கட்சியை கைப்பற்றுவதில் சித்தப்பா பசுபதி குமார் பரசுடன் மோதல் போக்கை பின்பற்றிய சிராக்கிற்கு தோல்வி தான் கிடைத்தது. இதற்கு முந்தைய மோடி அரசில், பசுபதி குமார் பரசுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது. ஆனால், கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், திடீரென பசுபதியை கழற்றி விட்டு, சிராக்குடன் கூட்டணி வைத்தது, பா.ஜ., கட்சி. பீஹாரில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட சிராக் கட்சி, அனைத்திலும் வெற்றி பெற்றது. இதனால், மோடி அமைச்சரவையில் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரானார் சிராக். தற்போது மத்தியில் அமைந்துள்ள கூட்டணி அரசுக்கு, சிராக் கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது. இதையடுத்து, சிராக் நடவடிக்கைகளில்இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் பதவிக்கு நேரடி நியமனம் என்ற திட்டத்தை அறிவித்து, கடும் எதிர்ப்பு காரணமாக, அதை அரசு வாபஸ் பெற்றது. இதன் பின்னணியில் சிராக் இருந்ததாக பா.ஜ.,வினர் கருதுகின்றனர். இதனால், சிராக் பாஸ்வான் மீது கோபத்தில் உள்ள பா.ஜ., தலைவர்கள் சிலர், 'கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு போலிருக்கிறது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.