உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / நடுத்தெருவில் நிறுத்திடுவாரோ?

நடுத்தெருவில் நிறுத்திடுவாரோ?

'இவருடன் இனி பயணிப்பது, நம் அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் போலிருக்கிறது...' என புலம்புகின்றனர், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்., தலைவருமான அஜித் பவாரின் ஆதரவாளர்கள்.சரத் பவாரின் சகோதரர் மகனான அஜித் பவார், இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களுடன், ஆளும் கூட்டணி யில் ஐக்கியமானார். இதற்கு பரிசாக, அவருக்கு துணை முதல்வர் பதவியும் கிடைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயரும், சின்னமும் அவருக்கே கிடைத்தது. சரத் பவார் தரப்பு, வேறு பெயர், சின்னத்தில் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டியதாயிற்று. ஆனாலும், லோக்சபா தேர்தலில் அஜித் பவார் கட்சி படுதோல்வி அடைந்தது. சரத் பவார் தரப்புக்கு வெற்றி கிடைத்தது. மஹாராஷ்டிராவின் பாரமதி தொகுதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து, தன் மனைவி சுனேத்ராவை நிறுத்தி, அதிலும் தோல்வி அடைந்தார், அஜித் பவார். இதனால், விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், அவருக்கு தோல்வி பயம் வந்து விட்டது. 'என் சகோதரி சுப்ரியாவுக்கு எதிராக என் மனைவியை நிறுத்தி மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இதற்கான பலனை இப்போது அனுபவிக்கிறேன்...' என, சமீபத்தில் புலம்பினார், அஜித் பவார். இதைக் கேள்விப்பட்ட அவரது கட்சியினர், 'இவர் பேசுவதை பார்த்தால், கட்சியை மீண்டும் சரத் பவாருடன் இணைத்து விட்டு, நம்மை நடுத்தெருவில் நிறுத்தி விடுவார் போலிருக்கிறதே...' என, முணுமுணுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி