‘தொடரும் காதல் பாரம்பரியம்!’
‘அரசியல் அதிகாரம் வேறு யார் கைக்கும் போய்விடக் கூடாது என்பதற்காக, முக்கிய கட்சிகளின் தலைவர்கள், தங்கள் வாரிசுகளின் காதல் திருமணங்களை அங்கீகரிக்கின்றனர்...’ என, வட மாநில மக்கள் பேசிக் கொள்கின்றனர். பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும், அகாலி தளம் கட்சித் தலைவருமான சுக்பீர் சிங் பாதலின் நெருங்கிய உறவினரின் மகள் ரியா பாதல். தற்போது ரியாவின் தந்தை, பஞ்சாப் மாநில பா.ஜ., துணைத் தலைவராக பதவி வகிக்கிறார். இவர், சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர். ரியாவும், காஷ்மீர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கரன் சிங்கின் பேரன் மார்டாண்டும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். மார்டாண்ட், ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில், இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு வந்திருந்த அரசியல் தலைவர் ஒருவர், தன் நண்பரிடம், ‘இதில், மற்றொரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது. மணமகன் மார்டாண்டின் தாய் யார் தெரியுமா? பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவின் சகோதரி சித்ரங்கடா ராஜே தான். இவர், குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்...’ என்றார். இதைக் கேட்ட நண்பர், ‘அப்படியானால், காலம் காலமாகவே இவர்களது காதல் திருமண பாரம்பரியம் தொடர்கிறது என்று சொல்லுங்கள்...’ என, நகைச்சுவையாக கூறினார்.