உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / புதுப்பிக்கப்படும் உறவு!

புதுப்பிக்கப்படும் உறவு!

'மீண்டும் நெருங்குவதை பார்த்தால், கூட்டணி விஷயத்தில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படும் போலிருக்கிறதே...' என, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி பற்றி பேசுகின்றனர், சக அரசியல்வாதிகள்.ஜம்மு - காஷ்மீரில்முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான, தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்துதான் தேசிய மாநாட்டு கட்சி போட்டியிட்டது.ஆனால், சமீபகாலமாக பா.ஜ.,வுடன் அந்த கட்சி தலைவர்கள் நெருக்கம் காட்டி வருகின்றனர். இதையறிந்த முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியும், தன் அரசியல் வியூகங்களை மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளார். இதன்படி, முதற்கட்டமாக, சமீபத்தில் ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்த அவர், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து விரிவாக விவாதித்ததாக தகவல்கள் கசிந்தன. ஆனால், இருவரும் அரசியல் பேசியதாகவும், குறிப்பாக, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக கவர்னரிடம், மெஹபூபா முப்தி பேசியதாகவும் விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். 'மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.,வும் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகள்தான். பழைய உறவை மீண்டும் புதுப்பிக்க மெஹபூபா விரும்புகிறார் போலிருக்கிறது...' என்கின்றனர், ஜம்மு - காஷ்மீர் அரசியல்வாதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ