மீண்டும் தோல்வியே பரிசு!
'ஏற்கனவே பலமுறை பாடம் கற்பித்தும், இவர்கள் திருந்தவில்லையே...' என, காங்கிரஸ் கட்சியினரை விமர்சிக்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். காங்கிரஸ் மூத்த தலைவரான மணிசங்கர் அய்யர், பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார். இதேபோல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலும், மோடி என்ற பெயர் உள்ள சமூகத்தினரை பற்றி அவதுாறாக பேசி, சர்ச்சையை கிளப்பினார். இன்று வரை அது தொடர்பான வழக்குகளுக்காக, நீதிமன்ற படிகளில் ராகுல் ஏறி இறங்கி வருகிறார். பிரதமர் மோடி பற்றி காங்கிரசார் அவதுாறாக பேசிய விஷயங்களை, தேர்தல் வரும்போதெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறி, பிரசாரம் செய்தனர், பா.ஜ.,வினர். தேர்தல் முடிவுகளில், இது பா.ஜ.,வினருக்கு சாதகமாக இருந்தது. அதே நேரத்தில், காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தான், காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'ஓட்டுகளை பெறவே, தான் தேநீர் விற்றதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். அவர், எப்போதாவது தேநீர் போட்டுள்ளாரா... இது எல்லாம் நாடகம்...' என, காட்டமாக விமர்சித்தார். கார்கேயின் இந்த பேச்சு, பா.ஜ.,வினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. 'தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. கார்கேயின் இந்த சர்ச்சை பேச்சை, மக்களிடம் அம்பலப்படுத்துவோம். காங்கிரஸ் கூட்டணிக்கு மீண்டும் தோல்வியை பரிசாக தருவோம்...' என, பா.ஜ.,வினர் கொந்தளிக்கின்றனர்.