உள்ளூர் செய்திகள்

வாழையடி வாழை!

'வாரிசு அரசியலை ஒழித்தால் மட்டுமே நாடு உருப்படும்...' என, விரக்தியுடன் பேசுகின்றனர், ஜம்மு - காஷ்மீர் மக்கள். இங்கு, முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடக்கிறது. மற்ற மாநிலங்களை போலவே இங்கும் வாரிசு அரசியல் கொடிகட்டி பறக்கிறது. ஒமர் அப்துல்லாவின் தாத்தா ஷேக் அப்துல்லா பற்றி அனைவருக்கும் தெரியும். இவர், ஜம்மு - காஷ்மீரின் முதல்வராக பதவி வகித்தவர். ஒமர் அப்துல்லாவின் தந்தை பரூக் அப்துல்லாவும் முதல்வராக இருந்தவர் தான்; தற்போது எம்.பி.,யாக உள்ளார்.சமீபகாலமாக தேசிய மாநாட்டு கட்சி மேடைகளில், ஒமர் அப்துல்லாவின் மகன்கள் ஷமீர் மற்றும் ஷாகீர் ஆகியோரை காண முடிகிறது. இப்போதே அவர்கள் அரசியல் பயிற்சி பெறத் துவங்கியுள்ளனர். மற்றொரு பக்கம், இங்குள்ள பிரதான எதிர்க்கட்சியான, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி, ஏற்கனவே அரசியலில் கால் பதித்து விட்டார்; தாயுடன் சேர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மெஹபூபாவின் தந்தை முப்தி முகமது சயீத்தும், ஜம்மு - காஷ்மீர் முதல்வராக இருந்தவர் தான்; மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். 'ஜம்மு - காஷ்மீரில் இந்த இரண்டு குடும்பத்தினர் மட்டுமே வாழையடி வாழையாக பதவிகளை ஆக்கிரமித்தால், மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் என்ன செய்வர்...' என, கொந்தளிக்கின்றனர், இங்குள்ள மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ