கத்துக்குட்டிகளால் முடியுமா?
'நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்து வருகிறோம். எங்களை புறக்கணிப்பது ஏன்...' என, தெலுங்கானா மாநில முதல்வரும், காங்., பிரமுகருமான ரேவந்த் ரெட்டியை பார்த்து கொதிக்கின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.தெலுங்கானாவில், 2023 டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மூத்த தலைவர்கள் பலர், முதல்வர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இளைஞரான ரேவந்த் ரெட்டியை முதல்வராக்கியது, காங்., மேலிடம்.தெலுங்கானா சட்டசபை பலத்தின் அடிப்படையில், இங்கு, 18 பேர் அமைச்சர்களாக பதவி வகிக்க முடியும். ஆனால், ரேவந்த் ரெட்டி, 13 பேரை மட்டுமே அமைச்சராக்கினார். ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், சமீபத்தில் மேலும் மூன்று பேரை அமைச்சராக்கி உள்ளார். இந்த மூன்று பேருமே, சட்டசபைக்கு புதியவர்கள். இதற்கு முன் இவர்கள், எம்.எல்.ஏ.,க்களாக இருந்தது இல்லை; ரேவந்த் ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.இவர்களை அமைச்சராக்கியது, கட்சியின் மூத்த தலைவர்களும், அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுமான சுதர்சன் ரெட்டி, ராஜகோபால் ரெட்டி ஆகியோருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 'ரேவந்த் ரெட்டிக்கு எங்களை போன்ற அனுபவசாலிகள் தேவையில்லை. கத்துக்குட்டிகள் தான் தேவை. இவர்களை வைத்து அடுத்த தேர்தலில் எப்படி வெற்றி பெறுவார் என பார்ப்போம்...' என பொறுமுகின்றனர், மூத்த நிர்வாகிகள்.