தேங்காய் அரசியல்!
'சாதாரண விஷயத்தை இப்படி பெரிதுபடுத்தி விட்டனரே...' என புலம்புகிறார், முன்னாள் மத்திய அமைச்சரும், கேரள மாநில பா.ஜ., தலைவருமான ராஜிவ் சந்திரசேகர். கேரளாவில், மா.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மோடி தலைமையிலான அரசில், மத்திய அமைச்சராக பதவி வகித்த ராஜிவ் சந்திரசேகர், திடீரென கடந்த மார்ச்சில், கேரள மாநில பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டார். இவர், அமெரிக்காவில் படித்தவர்; அங்கு, பல முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியவர். கேரளா தான் பூர்வீகம் என்றாலும், மலையாளத்தில் இவருக்கு சரளமாக பேச வராது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு, கட்சிக்காரர்களுடன் வழிபடச் சென்றார், ராஜிவ் சந்திரசேகர். அப்போது, தேங்காய் மீது கற்பூரத்தை ஏற்றி, உடைக்கும்படி கட்சியினர் கூறினர். ஆனால், தேங்காய் மீது கற்பூரத்தை எப்படி வைப்பது, தேங்காயை எப்படி உடைப்பது என, தெரியாமல் ராஜிவ் சந்திரசேகர் தடுமாறினார். உடன் இருந்த கட்சியினர் உதவியுடன் ஒரு வழியாக தேங்காயை உடைத்து விட்டு சென்றார். இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட எதிர்க்கட்சியினர், 'தேங்காய் உடைக்கவே தெரியாத ஒருவரை, பா.ஜ.,வின் மாநிலத் தலைவராக நியமித்துள்ளனர்...' என, கிண்டல் அடித்தனர். ராஜிவ் சந்திரசேகரோ, 'தேங்காய்க்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்...?' என புலம்புகிறார்.