எங்களுக்கென ஆசை இருக்காதா?
'இப்படியெல்லாம் குதர்க்கமாக விமர்சிக்கின்றனரே...' என, பொங்கி எழுகிறார், மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்து துறை அமைச்சரும், சிவசேனாவைச் சேர்ந்தவருமான பிரதாப் சரானிக். மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மும்பையில் சமீபத்தில், 'டெஸ்லா' நிறுவனத்தின் மின்சார கார் விற்பனை செய்யும் ஷோரூம் திறக்கப் பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் எலான் மஸ்க்கின் நிறுவனம் தான், இந்த டெஸ்லா. மும்பை ஷோரூமில் விற்பனையான முதல் காரை வாங்கியவர் யார் தெரியுமா? போக்குவரத்து துறை அமைச்சரான, பிரதாப் சரானிக். இந்த காரின் விலை, 62 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இந்த காரை, தன் பேரனுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார், பிரதாப் சரானிக். இந்த தகவல் வெளியானதுமே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிக ள் அவரை கடுமையாக விமர்சித்தன. 'உங்கள் கூட்டணி கட்சி தலைவரான பிரதமர் மோடி, உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை வாங்கும்படி பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், நீங்கள் வெளிநாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட காரை வாங்கி, பேரனுக்கு பரிசு கொடுக்கிறீர்களே...' என, காங்கிரஸ் தலைவர்கள், பிரதாப் சரானிக்கை காய்ச்சி எடுத்தனர். 'அரசியல்வாதிகளுக்கென தனியாக ஆசைகள், விருப்பங்கள் இருக்கவே கூடாதா...' என, குமுறுகிறார் பிரதாப் சரானிக்.