உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  ஆரோக்கியமான அரசியல்!

 ஆரோக்கியமான அரசியல்!

'ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக்கொண்டாலும், இதுபோன்ற விஷயங்கள் மனதுக்கு ஆறுதல் அளிக்கத்தான் செய்கிறது...' என்கின்றனர், மூத்த அரசியல்வாதிகள். பா.ஜ.,வினரும், காங்கிரசாரும் பார்லிமென்டிற்கு உள்ளும் சரி, வெளியிலும் சரி.. ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை சுமத்தி வருகின்றனர். கடந்த மாதம் நடந்து முடிந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரிலும், இரு தரப்பிலும் நேருக்கு நேர் வாக்குவாதம் நடந்ததால், சபையில் அனல் பறந்தது. இதற்கு நடுவில், காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரியை நோக்கி, 'கேரளாவில் உள்ள என் வயநாடு தொகுதியில் சாலை வசதிகள் சரியாக இல்லை. இதுகுறித்து உங்களிடம் நேரில் சந்தித்து முறையிட, பல மாதங்களாக நேரம் கேட்டு காத்திருக்கிறேன்...' என்றார். அதற்கு சிரித்தபடியே பதில் அளித்த கட்கரி, 'என் அலுவலகத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். என்னிடம் நேரம் கேட்க தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் வரலாம்...' என்றார். அடுத்த நாளே பிரியங்கா, அமைச்சர் கட்கரியின் அலுவலகத்துக்கு சென்று, தன் தொகுதி குறைகளை தெரிவித்தார். அவற்றை நிறைவேற்றுவதாக கட்கரியும் உறுதி அளித்தார். இதைப் பார்த்த மூத்த அரசியல்வாதிகள், 'அரசியலில் இன்னும் ஆரோக்கியமான விஷயங்கள் நடக்கத் தான் செய்கின்றன...' என, நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !