உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  மானம் கப்பலேறிப் போச்சு!

 மானம் கப்பலேறிப் போச்சு!

'இத்தனை ஆண்டுகளாக கட்டமைத்து வைத்திருந்த நம் பிம்பத்தை, ஒரே பேச்சில் சுக்கு நுாறாக்கி விட்டாரே...' என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி கோபத்தில் குமுறுகிறார், முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான தேவ கவுடா. கர்நாடகாவைச் சேர்ந்த தேவ கவுடாவுக்கு, 92 வயதாகிறது. இவரும், இவரது மகன் குமாரசாமியும், கர்நாடகாவில், காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைப்பது வழக்கம். ஆட்சி அதிகாரத்தை அனுபவித்த பின், பழைய கூட்டணியை கழற்றிவிட்டு, புதிய கூட்டணிக்கு தாவி விடுவர். தேவ கவுடாவின் மகன் குமாரசாமி, தற்போது பா.ஜ., கூட்டணியில், மத்திய அமைச்சராக உள்ளார். தேவ கவுடாவின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து, பார்லிமென்டில் நடந்த பிரிவு உபச்சார நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் கார்கே, அவரை வாழ்த்திப் பேசினார். இவரும் கர்நாடகாவை சேர்ந்தவர் தான். கார்கே பேசும்போது, 'தேவ கவுடாவை எனக்கு, 54 ஆண்டுகளாக தெரியும். அவர் எங்களுடன் பழகினார்; கூட்டணி வைத்தார். எங்கள் மீதுதான் காதல் கொண்டிருந்தார். ஆனால், என்ன நினைத்தாரோ தெரியாது... அவர், பா.ஜ.,வை திருமணம் செய்து கொண்டார்...' என, அடிக்கடி அவர் கூட்டணி மாறுவதை, கிண்டலாக சுட்டிக்காட்டினார். இதனால் கடுப்பான தேவ கவுடா, 'காங்கிரசுடன் கட்டாய திருமணம் செய்ததால், அந்த கூட்டணியை விவாகரத்து செய்து விட்டோம்...' என, கார்கேவுக்கு பதிலடி கொடுத்தாலும், 'ஒட்டுமொத்த மானமும் கப்பலேறிப் போச்சே...' என, மனதுக்குள் புழுங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !