ஊருக்கு தான் உபதேசமா?
'உண்மையை மறைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கு பார்த்தீர்களா...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுலை கிண்டல் அடிக்கின்றனர், பா.ஜ.,வினர். தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி ஆகியோரை, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். 'மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதை விட, இந்த தொழிலதிபர்களின் நலனுக்கான திட்டங்களைத் தான் மத்திய அரசு செயல்படுத்துகிறது...' என, ராகுல் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த தொழிலதிபர்களுடன், பிரதமர் மோடி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்களையும், சமூக வலைதளங்களில் ராகுல் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தான், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் சமீபத்தில் நடந்த, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின், 85வது பிறந்த நாள் விழாவில் ராகுல் பங்கேற்றார்.அந்த விழாவுக்கு தொழிலதிபர் கவுதம் அதானியும் வந்திருந்தார். ராகுலும், அதானியும் சில நிமிடங்கள் சிரித்து பேசிக் கொண்டனர். ஆனால், இந்த சந்திப்பை யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும், அப்படியே எடுத்தாலும், அதை, சமூக வலைதளங்களிலோ, பத்திரிகைகளிலோ வெளியிட வேண்டாம் என்றும், சரத் பவாரின் மகள் சுப்ரியாவிடம், ராகுல் வற்புறுத்தியதாக தகவல் வெளியானது. இதை கேள்விப்பட்ட பா.ஜ.,வினர், 'அதானி மீதான கோபம் இப்போது எங்கு போனது; ஊருக்குத் தான் உபதேசமா...' என, ராகுலை கிண்டல் அடிக்கின்றனர்.