ஓரம் கட்டப்படும் பிரியங்கா?
'பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால், இப்படி ஆகிவிட்டதே...' என, கவலைப்படுகின்றனர், காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் ஆதரவாளர்கள். காங்கிரசில் ராகுலுக்கும், பிரியங்காவுக்கும் தனித்தனி கோஷ்டிகள் இயங்கி வருகின்றன. எல்லா மாநிலங்களிலும் இந்த கோஷ்டியினர் உள்ளனர். கேரள மாநிலம், வயநாடு லோக்சபா தொகுதியில் பிரியங்கா வெற்றி பெற்றதும், அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.'பிரியங்கா தீவிர அரசியலுக்கு வந்து விட்டார். இனி, அவரை பிடித்து கட்சியில் முக்கியமான பதவிகளை வாங்கி விடலாம்...' என, கணக்கு போட்டிருந்தனர். ஆனால், பிரியங்காவோ, அவரது தொகுதியான வயநாட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்; மற்ற மாநிலங்களுக்கு அதிகம் செல்வது இல்லை. குஜராத் மாநிலம், ஆமதாபாதில் சமீபத்தில் காங்., தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், பிரியங்காவை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். நாடு முழுதும் இருந்து முக்கிய தலைவர்கள் அனைவரும் வந்த நிலையில், பிரியங்கா மட்டும் வரவில்லை. பார்லிமென்டில் நடந்த வக்ப் சட்ட திருத்த மசோதா தொடர்பான விவாதத்திலும் பிரியங்கா பேசவில்லை; இது, காங்கிரசில் உள்ள பிரியங்காவின் ஆதரவாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. 'கட்சியில் இருந்து பிரியங்கா ஓரம் கட்டப்படுகிறாரோ...' என, சந்தேகம் எழுப்புகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.