மேலும் செய்திகள்
கேரளாவின் முதல்வர் ஆகிறார் சதீசன்!
15-May-2026
'இன்னும் எத்தனை முறை தான், இவரை அவமதிப்பீர்கள்...' என, காங்கிரஸ் மேலிடத்தை பார்த்து கேள்வி எழுப்புகின்றனர், கேரளாவில் உள்ள, அந்த கட்சியின் மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதலாவின் ஆதரவாளர்கள். கேரளாவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வர் பதவியை பெறுவதற்கு ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன் ஆகியோர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். இதில் கே.சி.வேணுகோபால், காங்கிரசின் பொதுச் செயலராக பதவி வகிப்பவர். ராகுல், சோனியா உள்ளிட்ட மேலிட தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். வி.டி.சதீசன், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தவர். ரமேஷ் சென்னிதலா, கேரள காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். கடந்த 40 ஆண்டுகளாக காங்., கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர்; நான்கு முறை எம்.பி.,யாகவும், ஆறு முறை எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தவர். கேரளாவில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களிடம் செல்வாக்கு பெற்றவர் என்பதால், ரமேஷ் சென்னிதலாவுக்கு தான் முதல்வராகும் வாய்ப்பு கிடைக்கும் என, அனைவரும் நினைத்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், முதல்வர் பதவிக்கு சதீசன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதனால், ஆவேசமடைந்துள்ள கேரள காங்., நிர்வாகிகள், 'ஐந்து ஆண்டுகளுக்கு முன், சென்னிதலாவிடம் இருந்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறித்து, சதீசனிடம் கொடுத்தனர்; இப்போது முதல்வர் பதவியையும் அவருக்கே கொடுத்துள்ளனர். இதெல்லாம் நியாயம் தானா...?' என புலம்புகின்றனர்.
15-May-2026