பெருமை பேசும் நாயுடு!
'ஏற்கனவே, நான் சொல்லிதான் இந்தியாவில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என, தம்பட்டம் அடித்து வருகிறார். இப்போது இதை வேறு சொல்கிறாரா...' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு குறித்து பேசுகின்றனர், அங்குள்ள எதிர்க்கட்சியினர்.சந்திரபாபு நாயுடு, ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராக இருந்தபோது, ஹைதராபாத் நகரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.இதை சுட்டிக்காட்டும் வகையில், சில மாதங்களுக்கு முன் ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சந்திரபாபு நாயுடு, 'தெலுங்கு தேசம் கட்சி அறிவித்த பல திட்டங்களை, பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் பின்பற்றின. நாட்டின் வளர்ச்சியில் எங்களுக்கு முக்கிய பங்கு உண்டு...' என, கூறியிருந்தார். இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் சமீபத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்வில், பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் பேசிய சந்திரபாபு நாயுடு, 'யோகா கலையை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க, பிரதமர் மோடி குரல் கொடுக்க வேண்டும்...' என, கோரிக்கை வைத்தார். இதைக் கேள்விப்பட்ட ஆந்திர எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர், 'தப்பித்தவறி யோகாவை ஒலிம்பிக் போட்டியில் சேர்த்துவிட்டால், உலகமே நான் சொல்வதைத் தான் கேட்கிறது என, சந்திரபாபு நாயுடு பெருமை அடிப்பாரே...' என, புலம்புகின்றனர்.