யாருக்கும் வெட்கம் இல்லை!
'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பரும் இல்லை என கூறுவது, இந்த அரசியல்வாதிகளுக்கு ரொம்பவே வசதியாகி விட்டது...' என புலம்புகின்றனர், மஹாராஷ்டிர மாநில மக்கள். மஹாராஷ்டிரா வில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. தேசியவாத காங் கிரஸ் கட்சியின் நிறுவனரான சரத் பவாரின் சகோதரரின் மகன் அஜித் பவார். கடந்த, 2023ல், சரத் பவாருடன் மோதலில் இறங்கிய அஜித் பவார், தனி அணியாக பிரிந்து சென்றார். இதைத் தொடர்ந்து, கட்சியின் பெயரும், சின்னமும் அவருக்கே கிடைத்தன. தற்போது அஜித் பவார், பட்னவிஸ் தலைமையிலான மஹாராஷ்டிரா அரசில், துணை முதல்வராக உள்ளார். சரத் பவார், தேசியவாத காங்., சரத் சந்திர பவார் என்ற கட்சியின் தலைவராக உள்ளார். இந்த கட்சி, எதிர்க்கட்சியான காங்., கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சியான மும்பை உட்பட, மஹாராஷ்டிராவில் உள்ள, 29 மாநகராட்சிகளுக்கு, வரும் ஜன., 15ல் தேர்தல் நடக்க உள்ளது. இதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, சரத் பவாரும், அஜித் பவாரும் பழைய பகையை மறந்து, கூட்டணி அமைத்து, இந்த தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளனர். இதைக் கேள்விப்பட்ட மஹாராஷ்டிர மக்களோ, 'அரசியலில் யாருக்கும் வெட்கம் இல்லை போலிருக்கிறது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.