உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / சாட்டையடிக்கு தயார்?

சாட்டையடிக்கு தயார்?

'தேவையில்லாமல் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்டார்...' என, கர்நாடக மாநில பா.ஜ., தலைவரான விஜயேந்திராவை பற்றி பேசுகின்றனர், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள்.இங்கு, முதல்வர் சித்தராமையா தலைமை யிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் அணிவகுக்கின்றன.பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., இவற்றை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்தவில்லை என்ற முணுமுணுப்பு, ஏற்கனவே இருந்து வருகிறது.இந்த நேரத்தில், சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல்கொடுமைக்கு ஆளானதை கண்டித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டத்தை நடத்தி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.இது குறித்து விஜயேந்திராவிடம் கேட்டபோது, 'முறைகேடுகள், அநீதிகளுக்கு எதிராக இதுபோன்ற போராட்டங்களை நடத்துவது வரவேற்கத்தக்கது தான்...' என்றார்.இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட பா.ஜ.,வில் உள்ள விஜயேந்திரா அதிருப்தியாளர்கள், 'பக்கத்து மாநிலத்தில் நடக்கும் போராட்டத்தை பாராட்டுகிறார். ஆனால், கர்நாடகாவில் ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளுக்கு எதிராக, எந்த ஒரு கடுமையான போராட்டத்தையும் இவர் நடத்தவில்லையே...' என, குற்றம் சாட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சியினரோ, 'விஜயேந்திராவுக்கு ரோஷம் வந்து, அவரும் சாட்டையடி போராட்டம் நடத்தப் போகிறாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !