உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / தானாக வம்பில் சிக்கும் சர்மா!

தானாக வம்பில் சிக்கும் சர்மா!

'அடிக்கடி கட்சி தாவினால் இப்படிப்பட்ட அவ மானங்களை எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும்...' என, அசாம் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஹிமந்த பிஸ்வா சர்மாவை கிண்டல் அடிக்கின்றனர், அங்குள்ள காங்., கட்சியினர். ஹிமந்த பிஸ்வா சர்மா, ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்; 2015ல், பா.ஜ.,வில் இணைந்தார். சமீபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க் காலமானார். அவர் இறந்த ஒரு மாதத்துக்கு பின், துக்கம் விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்கு, காங்கிரஸ் எம்.பி., ராகுல் வந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சர்மா, 'காங்கிரஸ் தலைவர்களுக்கு, அசாம் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லை. பிரபல பாடகர் இறந்து, ஒரு மாதம் கழித்து துக்கம் விசாரிக்க ராகுல் வந்துள்ளார். இப்படித் தான், 2011ல், அசாமைச் சேர்ந்த பாடகரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான பூபேன் ஹசாரிகா இறந்தபோது, துக்கம் விசாரிப்பதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருவர் கூட வரவில்லை...' என்றார். உடனடியாக சுதாரித்த காங்., கட்சியினர், 2011ல், ஹசாரிகா இறந்தபோது, அவரது வீட்டுக்கு, ராகுல் துக்கம் விசாரிக்க வந்த பழைய புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதில், வேடிக்கை என்னவென்றால், இந்த புகைப்படத்தை அப்போது பதிவிட்டது, அந்த காலகட்டத்தில் காங்கிரசில் இருந்த ஹிமந்த பிஸ்வா சர்மா தான். 'பழைய விஷயங்களை சர்மா எளிதாக மறந்து விடலாம்; ஆனால், காலம் மறக்காது...' என கிண்டல் அடிக்கின்றனர், காங்கிரஸ் கட்சியினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை