புலம்பும் ஷிண்டே!
'இப்படிப்பட்டவர்களை வைத்து எப்படி கட்சி நடத்துவது...?' என, தன் சக அமைச்சர்களை பார்த்து கவலைப்படுகிறார், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, நம் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. நிர்வாகத்தில் இருப்பவர்கள் சிக்கன நடவடிக்கையை பின்பற்றும்படி, பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், மஹாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சரும், சிவசேனாவைச் சேர்ந்தவருமான பிரதாப் சர்நாயக், டீசல் காரை ஓரம்கட்டி விட்டு, பேட்டரியில் இயங்கும் காரை புதிதாக வாங்கி பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தார். இதற்கு, சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 'பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், எதற்கு பல லட்சம் ரூபாய் செலவழித்து புதிய கார் வாங்க வேண்டும். 'உண்மையிலேயே சிக்கன நடவடிக்கையை பின்பற்றுபவராக இருந்தால், மெட்ரோ ரயில், பஸ்சில் தானே அவர் பயணித்திருக்க வேண்டும்...' என, அமைச்சர் பிரதாப்பை பலரும் விமர்சிக்கின்றனர். 'இவரை போன்ற விளம்பர விரும்பிகளால், கட்சிக்குத் தான் கெட்ட பெயர்...' என, ஏக்நாத் ஷிண்டே புலம்புகிறார்.