'தேர்தல் தோல்வி, அவரை ரொம்பவே மாற்றி விட்டது; இதுவும் ஒரு வகையில் நல்லது தான்...' என, பீஹார் முன்னாள் அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனுமான தேஜ் பிரதாப் யாதவ் பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியினர். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. லாலு பிரசாத் யாதவ், தன் அரசியல் வாரிசாக, இளைய மகன் தேஜஸ்வி யாதவை அறிவித்ததில் இருந்தே, மூத்த மகன் தேஜ் பிரதாப், விரக்தியில் இருந்தார். இதனால், லாலு பிரசாத் யாதவுடன் மோதல் போக்கை பின்பற்றினார், தேஜ் பிரதாப். இதை யடுத்து, அவரை கட்சியை விட்டே நீக்கினார், லாலு. கடுப்பான தேஜ் பிரதாப், கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியை துவக்கினார். பீஹாரின் மஹுவா சட்டசபை தொகுதியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் வேட்பாளரை எதிர்த்து களம் இறங்கி, படுதோல்வி அடைந்தார். தோல்விக்கு பின், சில வாரங்கள் அமைதியாக இருந்த தேஜ் பிரதாப், இப்போது சமூக வலைதளத்தில் கணக்கு துவங்கி, 'தினமும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவது எப்படி, அழகாக தோன்றுவது எப்படி, நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது எப்படி...' என, அனைவருக்கும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார். 'அரசியல் நமக்கு சரிப்பட்டு வராது என்பதை, தேஜ் பிரதாப் யாதவ் உணர்ந்து விட்டார் போலிருக்கிறது...' என, கிண்டல் அடிக்கின்றனர், லாலு கட்சியினர்.