அடுத்த முதல்வர்?
'கட்சியில் என்ன நடக்குது என்றே தெரியவில்லை. ஒரே மர்மமாக இருக்கிறது...' என, கவலைப்படுகின்றனர், குஜராத்தில் உள்ள, பா.ஜ., தலைவர்கள். இங்கு, முதல்வர் பூபேந்திர படேல் தலைமை யிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. திடீரென முதல்வர் பூபேந்திர படேல் தவிர, ஒட்டு மொத்தமாக, 16 அமைச்சர்கள், தங்கள் பதவி களை சமீபத்தில் ராஜினாமா செய்தனர்; இது, குஜராத், பா.ஜ.,வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடுத்த நாளே, 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில், 19 பேர் புதுமுகங்கள். பெரும்பாலானோர் இளைஞர்கள். இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ஜடேஜாவின் மனைவி ரிவாபாவும், அமைச்சராக பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக பதவியேற்ற ஹர்ஷ் சங்கவி தான், இதில் குறிப்பிடத்தக்கவர். இவருக்கு, 40 வயது தான் ஆகிறது. இவரது வருகை, குஜராத் பா.ஜ.,வில் உள்ள மூத்த தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., தரப்பிலோ, 'அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் அமைச்சராக வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த மாற்றம் நடந்துள்ளது...' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்தாண்டு குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது; 2027ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் வைத்துத் தான், அமைச்சரவை மாற்றம் நடந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 'வரும், 2027ல், அடுத்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றால், ஹர்ஷ் சங்கவி தான் முதல்வர். அவருக்கு இப்போதே பயிற்சி கொடுப்பதற்காக தான், துணை முதல்வராக்கி உள்ளனர்...' என்கின்றனர், மற்ற அரசியல் கட்சியினர்.