உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / போராட்டம் பிசுபிசுக்கும்!

போராட்டம் பிசுபிசுக்கும்!

'சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் நான்கரை ஆண்டுகளும், லோக்சபா தேர்தலுக்கு நான்கு ஆண்டுகளும் உள்ளன. அதனால் எங்களுக்கு கவலையில்லை...' என, தைரியமாக சொல்கின்றனர், மஹாராஷ்டிரா மாநில பா.ஜ.,வினர். இங்கு, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 'மஹாராஷ்டிராவில், மராத்தி மற்றும் ஆங்கில வழி கல்வி பள்ளிகளில், 1 - 5ம் வகுப்பு வரை, ஹிந்தி பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும்' என, சமீபத்தில் மாநில அரசு அறிவித்தது. 'இது, ஹிந்தியை மஹாராஷ்டிரா மக்கள் மீது திணிக்கும் முயற்சி' என, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஜ் தாக்கரேயின் மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் குதித்துள்ளன. சிவசேனா கட்சியை நிறுவிய, மறைந்த பால் தாக்கரேயின் சகோதரர் மகன் தான், ராஜ் தாக்கரே. சிவசேனாவின் பிரசார பீரங்கியாக ராஜ் தாக்கரே விளங்கினார். ஆனால், பால் தாக்கரே, அரசியல் வாரிசாக, தன் மகன் உத்தவ் தாக்கரேவை அறிவித்ததால், அதிருப்தி அடைந்த ராஜ் தாக்கரே, சிவசேனாவில் இருந்து வெளியேறி தனிக்கட்சியை துவக்கினார்.கடந்த, 19 ஆண்டுகளாக பரம விரோதிகளாக, எதிரும் புதிருமாக இருந்த ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துக்காக மீண்டும் இணைந்துள்ளது, மஹாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பா.ஜ.,வினரோ, 'இவர்களது கட்சிகள் மக்களிடம் செல்வாக்கு இழந்து விட்டன; இவர்களது போராட்டம் பிசுபிசுத்து விடும்...' என, உறுதியாக சொல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !