இது துரோகிகளின் காலம்!
'இவ்வளவு வயதான காலத்தில், இவருக்கு இத்தனை கஷ்டங்கள் வரக்கூடாது...' என, தேசியவாதகாங்கிரஸ் கட்சி நிறுவனரான சரத் பவாரை பார்த்து பரிதாபப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள். மஹாராஷ்டிரா முதல்வர், மத்திய அமைச்சர் உட்பட பலமுக்கிய பதவிகளை வகித்தவர், சரத் பவார்.தற்போது இவருக்கு 83 வயதாகிறது. உடல்நிலை சரியில்லாவிட்டாலும், இன்னும் தீவிர அரசியலில் இயங்குகிறார்.கடந்தாண்டு இவருக்கு பெரும் சோதனை ஏற்பட்டது. இவரது அண்ணன் மகனும், கட்சியின் முக்கிய தலைவர்களில்ஒருவராக இருந்தவருமான அஜித் பவார், தேசியவாத காங்கிரசை இரண்டாக உடைத்து, கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளுடன், பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டம் பிடித்தார். நீதி கேட்டு கோர்ட்டுக்கு சென்றார், சரத் பவார். ஆனால், கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் அஜித் பவார் பக்கம் இருந்ததால், 'கட்சியும், சின்னமும் அவருக்கே சொந்தம்' என, கோர்ட் தீர்ப்பளித்து விட்டது. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் சரத் பவாருக்கு அடுத்த அடி விழுந்தது. சமீபத்தில் நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், சரத் பவார் அணி, 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அஜித் பவார் தரப்போ, 41 தொகுதிகளில் வெற்றிக் கொடி நாட்டியது. இதை, சரத் பவாரால் ஜீரணிக்கவே முடியவில்லை. 'இப்போதெல்லாம் துரோகிகளுக்குத் தான் நல்லது நடக்கிறது...' என புலம்புகிறார், சரத் பவார்.