உள்ளூர் செய்திகள்

 சோதனை காலம்!

'இவர் வேண்டுமானால் சிக்கனத்தை கடைப்பிடிக்கட்டும்; நம்மை ஏன் படுத்தி எடுக்கிறார்...' என, அசாம் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வ சர்மா பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், அம்மாநில உயர் அதிகாரிகள். மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, நம் நாட்டில் பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றும்படி நாட்டு மக்களுக்கும், மாநில அரசுகளுக்கும், பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். இதற்கு முன்னோட்டமாக, தன் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளார். பிரதமரை பின்பற்றி, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவும், தன் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை, 10ல் இருந்து நான்காக குறைத்துள்ளார். இது மட்டுமின்றி, அரசு அதிகாரிகளுக்கான வாகனங்களையும் கணிசமாக குறைக்க உத்தரவிட்டுள்ளார். முதல்வர், பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது, அவருடன் உயர் அதிகாரிகளும் செல்வது வழக்கம். இதற்காக, ஒவ்வொரு அதிகாரியும், தனித்தனி கார்களில் பயணிப்பர். ஆனால், தற்போது அனைத்து அதிகாரிகளும் ஒன்றாக பயணிக்கும் வகையில், ஒரு பெரிய பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாடு குறையும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை காரிலேயே சொகுசாக பயணித்த உயர் அதிகாரிகள், இப்போது பஸ்சில் பயணிப்பதை நினைத்து, 'இது நமக்கு சோதனை காலம் போலிருக்கிறது...' என புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை