ரகசியம் என்ன?
'தேர்தல் நெருங்கினாலே, அரசியல்வாதிகளின் மனது இளகி விடுகிறது. மக்களின் மீது பாசம் பொங்குகிறது...' என, கிண்டலாக பேசுகின்றனர், பீஹார் மக்கள். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமை யிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை மற்றும் வரும் 11ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமாரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, 'இண்டியா' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் முதல்வராகி விட வேண்டும் என்ற நோக்கத்துடன், நிதிஷ் குமார் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்; வாக்காளர்களிடம் மிகவும் உருக்கமாக பேசி, ஓட்டு சேகரித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், 'பீஹார் மக்களுக்காக, 20 ஆண்டுகளாக நேர்மையாகவும், கடின உழைப்புடனும் பணியாற்றி வருகிறேன். என் குடும்பத்துக்காக அல்ல; அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறேன்...' என, கண்ணீர் மல்க பேசினார். இதைப் பார்த்த பீஹார் மக்கள், 'ஓட்டு வாங்குவதற்காக உருக்கமாக பேசும் அரசியல்வாதிகளின் மனது, ஆட்சிக்கு வந்தவுடன் இரும்பாக மாறி விடும் ரகசியம் என்ன...?' என, கிண்டல் அடிக்கின்றனர்.