யார் அந்த துரோகிகள்?
'எங்கள் தலைவரை அரசியல் ரீதியாக வீழ்த்த முடியாத கோழைகள், சதித்திட்டம் வாயிலாக வீழ்த்த முயற்சிக்கின்றனர்...' என கொந்தளிக்கின்றனர், கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மாநில தலைவருமான சிவகுமாரின் ஆதரவாளர்கள். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சித்தராமையாவிடம் அரசியல் சாணக்கியத்தனம் இருந்தாலும், தேர்தல்களை சந்திப்பதற்கும், வியூகம் வகுப்பதற்கும் தேவையான பணபலம் சிவகுமாரிடம் தான் உள்ளது. இதனால், எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட துடியாய் துடிக்கிறார், சிவகுமார். சித்தராமையாவோ, நாற்காலியை விட்டுத்தர மறுத்து, பிடிவாதம் பிடிக்கிறார்.மறுபக்கம், எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் சிவகுமாருக்கு தொல்லை கொடுத்து வருகிறது. அவர் மீது அமலாக்கத் துறையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த நேரத்தில்தான், பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், சிவகுமாருக்கும் தொடர்புஉள்ளதாக கர்நாடகா முழுதும் வதந்திகள் உலவுகின்றன. சமூக வலைதளங்களிலும், இதுகுறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகின்றன. இதனால் கடுப்பான சிவகுமார் ஆதரவாளர்கள், 'எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எங்கள் தலைவர் மீது புகார் கூறுவது எதிர்க்கட்சியினரா அல்லது எங்கள் கட்சியில் உள்ள துரோகிகளா என்று தெரியவில்லை...' என ஆவேசப்படுகின்றனர்.