உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  கண்களை உறுத்துவது ஏன்?

 கண்களை உறுத்துவது ஏன்?

'குடும்பத்துடன் சில நாட்கள் வெளிநாட்டுக்கு சென்றதால், வதந்தியை பரப்பி விட்டனரே...' என கவலைப்படுகிறார், பீஹாரில் செயல்படும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ். கடந்தாண்டு நடந்த பீஹார் சட்டசபைத் தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தது; ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது, பா.ஜ.,வின் சாம்ராட் சவுத்ரி முதல்வராக உள்ளார். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று, முதல்வராகி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த தேஜஸ்வி யாதவின் கனவு தகர்ந்தது. இதனால், அரசியல் விவகாரங்களில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல், அடக்கி வாசித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் தன் குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சென்றார், தேஜஸ்வி. இதையடுத்து, பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சியினர், 'பங்கிபுர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்யக்கூட வராத அளவுக்கு, தேஜஸ்வி யாதவுக்கு வெளிநாட்டில் என்ன வேலை? 'அவருக்கு வெளிநாட்டில் சில பிரச்னைகள் உள்ளன; அவற்றை தீர்ப்பதற்காக சென்றுள்ளார்; அப்படியே, படிப்படியாக அரசியலில் இருந்தும் விலகி விடுவார்...' என விமர்சித்தனர். இதனால் கடுப்பான தேஜஸ்வி, 'நம் நாட்டில், எந்த அரசியல் தலைவருமே வெளிநாட்டுக்கு செல்வது இல்லையா; நான் வெளிநாட்டுக்கு சென்றது மட்டும், ஏன் இவர்களது கண்களை உறுத்துகிறது...?' என, ஆவேசப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ